Saturday, February 16, 2013

சாபத்தை பெற்றுத் தரும் மவ்லிதும்!! ஷஃபாஅத்தை பெற்றுத் தரும் ஸலவாத்தும்




அல்லாஹ்வின் இறுதித் தூதரான முஹம்மது (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் உள்ளத்தில் யாரும் அடைய முடியாத இடத்தை அடைந்திருக்கின்றார்கள். அவர்களுக்காக உயிரையே அர்ப்பணிக்கக் கோடான கோடி மக்கள் காத்திருக்கின்றனர்.

ஒருவர் மீது அன்பு கொண்டு விட்டால் அந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரைப் புகழ ஆரம்பித்து விடுவது மனித இயல்பு! அப்படிப் புகழும் போது மனிதன் வரம்பு கடந்து விடுகின்றான். தான் நேசிப்பவரைக் கடவுள் அந்தஸ்திற்குக் கொண்டு சென்று விடுகின்றான். அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த வாசலை அடைக்கின்றார்கள்.

"கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியார் தான். அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிம்பரின் மீது அமர்ந்த படி உமர் (ர-) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி 3445

நபி (ஸல்) அவர்கள் என்ன காரணத்திற்காக அஞ்சி, தம்மைப் புகழக் கூடாது என்றார்களோ அந்தக் காரணத்தை, புகழ்ச்சியில் வரம்பு மீறுதலை இந்தச் சமுதாயம் அப்படியே நிறைவேற்றுவதை நாம் பார்க்கிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் புகழ்வதாகக் கூறி இயற்றப்பட்ட மவ்லிதுகள் புகழ் மாலைகளல்ல, பொய் மாலைகள் தான் என்பதையும் இவற்றை ஓதினால் சுவனம் கிடைக்காது, நரகம் தான் பரிசாகக் கிடைக்கும் என்பதையும் இந்த இதழில் விரிவாகக் கண்டோம்.
அப்படியானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேறு வாய்ப்பே இல்லையா? என்றால் நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துவதற்கு அல்லாஹ் ஒரு வடிகாலைத் தந்துள்ளான். அது தான் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டக் கூடிய ஸலவாத்.

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்! (அல்குர்ஆன் 33:56)

இந்த வசனத்தைக் கண்டவுடன் அல்லாஹ்வின் தூதருக்காக ஸலவாத், ஸலாம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகின்றது. இதற்காக நமது சொந்த வார்த்தைகளைக் கொண்டு புகழ் மாலை தொடுக்கும் போது நிச்சயமாக அது யூத, கிறித்தவர்கள் புகுந்த பாதையில் கொண்டு போய்ச் சேர்த்து விடும். பாழாய்ப் போன ஷிர்க் என்னும் பெரும் பாவத்தில் நம்மைப் புதைத்து விடும். அதனால் தான் மேற்கண்ட வசனம் இறங்கியவுடன் நபித் தோழர்கள் ஸலவாத் சொல்வது எப்படி என்று நபி (ஸல்) அவர்களிடமே கேட்டு, கற்றுக் கொள்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது ஸலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஸலவாத் கூறுவது எப்படி?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹும்ம ஸல்- அலா முஹம்மதின் வ அலா ஆ- முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆ- இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆ- முஹம்மதின் கமா பாரக்த அலா ஆ- இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் என்று சொல்லுங்கள்'' என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)
நூல் : புகாரி 4797

"எங்கள் தொழுகையில் நாங்கள் எவ்வாறு ஸலவாத் சொல்வது?'' என்று நபித்தோழர்கள் கேட்ட போது, நபி (ஸல்) அவர்கள் இந்த ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்ததாக முஸ்னத் அஹ்மதில் ஹதீஸ் (16455) இடம் பெற்றுள்ளது. தொழுகை அல்லாத சமயங்களில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றோ ஸல்லல்லாஹு அலா முஹம்மது வ ஸல்லம் என்றோ கூறுவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.
(பார்க்க: நஸயீ 2728)

ஒன்றுக்கு பத்து.

"யார் அல்லாஹ்விடம் என் மீது அருள் புரியுமாறு ஒரு தடவை துஆச் செய்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் பத்து தடவை அருள் புரிகின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 577

அதான் முடிவில் அருள்மிகு ஸலவாத்..

முஅத்தினின் அதானை நீங்கள் செவியுறும் போது, அவர் சொல்வது போன்றே நீங்களும் சொல்லுங்கள். பிறகு நீங்கள் என் மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில் நிச்சயமாக என் மீது யார் ஸலவாத் சொல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பத்து தடவை அருள் செய்கின்றான். பிறகு எனக்காக வஸீலாவைக் கேளுங்கள். நிச்சயமாக அது சுவனத்தில் உள்ள தகுதியாகும் (அல்லது வீடாகும்).

அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்கே தவிர வேறு யாருக்கும் அது கிடைக்காது. (அதை அடையும்) அடியாராக நான் ஆகவேண்டும் என்று ஆதரவு வைக்கின்றேன். யார் எனக்காக அந்த வஸீலா வேண்டி பிரார்த்திக்கின்றாரோ அவருக்கு என்னுடைய பரிந்துரை ஏற்பட்டு விட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ்(ரலி)
நூல்: முஸ்லிம்

பாங்கு சொல்லப்படும் போது அதற்குப் பதில் கூறி, அதன் இறுதியில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும், அவர்களுக்காக வஸீலா வேண்டி பிரார்த்தனையும் செய்பவருக்கு மறுமையில் நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் உறுதியாகி விட்டது என்பதை இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பரிந்துரைக்காக மக்கள் அலை மோதும் மறுமை நாளில் நமக்குப் பரிந்துரையைப் பெற்றுத் தரும் சாதனமாக இந்த ஸலவாத் அமைந்துள்ளது.

நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத்தைப் பெற்றுத் தரும் இந்த ஸலவாத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் மவ்லிதுகளை இனியும் ஓதலாமா?

நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டப்படுதல்.

ஒரு தொண்டன் தனது தலைவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக, தனது தலைவருக்கு தனது அன்பின் பரிமாணம் தெரிய வேண்டும் என்பதற்காக மிகப் பெரிய முயற்சிகளை மேற்கொள்வதைப் பார்க்கிறோம். உடல் உறுப்புக்களைச் சேதப்படுத்துதல், தன்னையே அழித்துக் கொள்ளுதல் போன்ற ஆபத்தான அழிவுப் பாதையை இதற்காகத் தேர்ந்தெடுக்கின்றான். இஸ்லாம் இந்த உளவியல் ரீதியான பிரச்சனையை உரிய வகையில் கையாள்கின்றது.


உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, "நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அவ்ஸ் பின் அவ்ஸ்,
நூல் : அபூதாவூத் 883

"நிச்சயமாக பூமியில் சுற்றித் திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல் : நஸயீ 1265

அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் மவ்லிதுகளை விட்டு விட்டு, அவனது அருளை அள்ளித் தரும் ஸலவாத்தைக் கூறுவோம். அளப்பரிய நன்மைகளை அடைவோம்.

குறிப்பு: நமது ஸலவாத், ஸலாம் நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்பதை வைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் தற்போதும் உயிருடன் இருக்கின்றார்கள் என்றோ அல்லது இறந்தவர்கள் செவியேற்கின்றார்கள் என்றோ விளங்கிக் கொள்ளக் கூடாது. நீங்கள் சொல்லும் ஸலவாத்தை நான் கேட்கின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இதற்கென நியமிக்கப் பட்டிருக்கும் மலக்குகள் மூலம் இது தனக்கு எடுத்துக் காட்டப்படுவதாக நபி (ஸல்) அவர்கள் விளக்கமளிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் வழங்கிய தனிச் சிறப்பாகும். வேறு யாருக்கும் இது கிடையாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜஸாக்கல்லாஹ்..,

எம். ஷம்சுல்லுஹா (ரஹ்மானி) & ஆன்லைன் பி.ஜே.
 

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons