.
அன்பின் சகோதரர்களே!
'உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடிய தாகவே உள்ளது” (17-81)
கடந்த 17.09.2011 சனிக்கிழமை மாலை அனுராதபுர மாவட்டத்தில் முஸ்லீம்களை அதிகமாக கொண்ட ஊரான கலாவெவயின் பழைய கொமினிகேஷன் ஜங்ஷன் (டீகோ டவர்) பகுதியில் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி ஒன்றை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கலாவெவைக் கிளையினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் இஸ்லாத்தின் பெயரால் நமது சமுதாய மக்கள் செய்யும் மார்க்கத்தில் இல்லாத பித்அத்தான காரியங்கள் எவை? அவற்றை செய்பவர்களின் மறுமை நிலை என்ன? என்ற தலைப்பில் ஜமாத்தின் பிரச்சாரகரும், அழைப்பு மாத இதழின் துணை ஆசிரியருமான சகோதரர் ரஸ்மின் M.I.Sc அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நடந்தது என்ன?
பித்அத் மற்றும் இணைவைத்தல் என்றால் என்ன? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டதின் பின்னால் பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மார்க்க விஷயமாக உள்ள சந்தேகங்களுக்கு குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் பதில் தரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஆரம்பமாக சில கேள்விகள் கேட்க்கப்பட்டு அதற்கு மார்க்க அடிப்படையில் ஆதாரத்துடன் விளக்கம் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது நிகழ்ச்சியை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு வந்த சிலவிஷமிகள் வேண்டுமென்று கூச்சலிட்டு நிகழ்ச்சியின் ஒழுங்கைகெடுப்பதற்கு பெரும் பிரயத்தனத்தை மேற்கொண்டார்கள்.
பகிரங்க சவாலும், வாயடைத்த பித்அத்வாதிகளும்.
மார்க்கத்தின் பெயரால் செய்யப்படும் பித்அத்தான காரியங்கள் பட்டியலிடப்பட்டு பகிரங்க விவாத சவால் விடப்பட்டது. நடு ஊருக்குள் நடந்த பகிரங்க நிகழ்ச்சியில் ஊரில் இருக்கும் பித்அத்தை ஆதரிக்கும் ஒரு மவ்லவியால் கூட சவாலை எதிர் கொண்டு தாங்கள் செய்வதை சரியென்று நிரூபிக்க திராணியற்றுப் போனதைக் கண்ட பல சகோதரர்கள் சத்தியம் எது? அசத்தியம் எது? என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டார்கள்.
பகிரங்க சவால் விடுத்து பட்டியல் போடப்பட்ட சில பித்அத்துக்கள்.
ஐங்காலத் தொழுகையின் பின் கூட்டு துஆ ஓதுவது.
சுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதுவது.
ஜும்மாவில் இரண்டு பாங்கு சொல்லுவது.
பெருநாள் தொழுகையை பள்ளியில் தொழுவது.
மரணித்தவர்களுக்கு கத்தம் பாத்திஹா ஓதுவது.
மவ்லிது என்ற பெயரில் நபி பிறந்த தினம் கொண்டாடுவது.
மார்க்கத்தின் பெயரால் தொப்பி அணிவது.
மரணித்தவருக்கு யாசீன் ஓதுவது.
தராவீஹ் என்ற பெயரில் 23 ரக்அத்துக்கள் தொழுவது.
தாயத்து போடுவது.
போன்றவை நபியவர்கள் காட்டித்தராத மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பித்அத்துக்களாகும். இந்த பித்அத்துக்களை செய்பவர்கள், அதனை சரிகாண்பவர்கள். பகிரங்க விவாதத்தில் அதனை நிரூபிக்கத் தயாரா? என மைக்கில் பல முறை அறிவிக்கப்பட்டும் அங்கிருந்த யாரும் இந்த சவாலை ஏற்றுக் கொள்ளவில்லை.
சட்டியில் இருந்தால் தானே கரண்டியில் வரும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் இல்லாததைப் புதிதாக யாராவது உண்டாக்கினால் அது நிராகரிக்கப்படும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள். நூல் : புகாரி 2697
தொப்பியை தூக்கியெறிந்து சுன்னாவை ஏற்றுக் கொண்ட முதியவர்.
தான் தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தொப்பி அணிந்து வருவதாகவும் தொப்பி அணிவது சுன்னத் - நபி வழியென்றுதான் தனக்கு சொல்லித் தந்ததாகவும் அதனை இதுவரைக்கும் பின்பற்றி வந்திருக்கிறேன். உண்மையில் இஸ்லாத்தில் தொப்பியின் நிலை என்ன? தொப்பியின்றி இந்த பௌத்த - புத்த மதத்தை ஆட்சி மதமாகக் கொண்ட இலங்கையில் முஸ்லீம்கள் தங்களை அடையாளம் காட்டுவது எப்படி? என்று ஒரு முதியவர் கேள்வியெழுப்பினார்.
அதற்கு தொப்பியைப் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு மற்றும் இலங்கையில் முஸ்லீம்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் பதில் சொல்லப்பட்டதும். உடனே அந்த முதியவர் தான் அணிந்திருந்த தொப்பியைக் கலட்டிவிட்டு தவ்ஹீத் ஜமாத்தின் சொல்வது தான் சரியான கொள்கை என்பதை ஏற்றுக் கொண்டு தான் அணிந்திருந்த தொப்பியைக் கலட்டி வைத்துவிட்டார். அல்ஹம்துலில்லாஹ்.
சுப்ஹு குனூத்தும்> விவாதத்திற்கு பின்வாங்கிய பித்அத் வாதிகளும்.
பயான் நிகழ்ச்சிக்குப் பின் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேள்வி கேட்பதாக சொல்லிக் கொண்டு வந்த ஒருவர் (இவர் எப்படிப்பட்டவர் என்பது ஊராருக்கு தெளிவாக தெரிந்த உண்மை) சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதக் கூடாது என்பதற்கு ஆதாரம் என்ன? என்று கேள்வியெழுப்பினார்.
நபியவர்களின் வாழ்நாளில் ஒரு தடவை கூட சுப்ஹு தொழுகையில் குனூத் என்ற ஒன்றை ஓதவில்லை. அப்படி ஓதியதற்கு ஸஹீஹான ஹதீஸ்களில் எந்த ஆதாரமும் இல்லை. அதனால் தான் சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது பித்அத் என்று நாம் கூறுகிறோம். நீங்கள் செய்வது நபிவழியில் இருந்தால் ஆதாரத்தை நீங்கள் காட்டுங்கள் என்று நமது தரப்பால் பதில் சொல்லப்பட்டது.
அப்போது அதை எதிர்த்துக் கூச்சலிட்ட குறிப்பிட்ட மேதாவி (?) இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் என்று தன்னை ஒரு அறிவாளி என்று நினைத்துக் கொண்டு அடிமட்ட முட்டாள் தனமான கேள்வியை முன்வைத்தார்.
இல்லை என்பதற்கு நபியவர்கள் செய்யவில்லை என்பதுதான் ஆதாரம். சுப்ஹுத் தொழுகையில் குனூத் இருக்கிறது என்றால் ஹதீஸைக் காட்டுங்கள். என்று சிறு பிள்ளைக்கும் விளங்கும் விதமாக நமது தரப்புபேச்சாளர் பதில் சொல்லியது அங்கிருந்த அனைவருக்கும் விளங்கினாலும் குறிப்பிட்ட அறிவாளி(?)க்கு மாத்திரம் விளங்காமல் போனது ஏனோ?
சுப்ஹு குனூத் தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு தயாரா? என்று பல முறை நமது தரப்பு மவ்லவி அழைப்பு விடுத்தும் எங்களுக்கு விவாதத்திற்கு வர முடியாது என்று பித்அத் வாதிகள் பகிரங்கமாக ஒத்துக்கொண்டார்கள். (அவர்கள் ஒத்துக் கொண்ட காட்சி வீடியோவாக பதியப்பட்டுள்ளது)
பகிரங்க சவால்.
கடந்த சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் விவாத அழைப்பு விடுக்கப்பட்டு பகிரங்கமாக மைக்கில் அறிவிப்பு விடப்பட்டும் விவாத சவாலை ஏற்றுக்கொண்டு தாம் செய்வதை குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் நிரூபிப்பதற்கு பித்அத் ஆதரவாளர்கள் தயாராகவில்லை.
மாறாக வெற்று வீராப்பு பேசும் இவர்கள் அடுத்த நாள் குனூத் தொடர்பான ஒரு துண்டுப் பிரசுரத்தை மாத்திரம் ஊரில் ஆங்காங்கு விநியோகம் செய்திருந்தார்கள். தாங்கள் செய்வது மார்க்க அடிப்படையில் அமைந்தது தான் என்றால் அதை நிரூபிப்பதற்கு கிடைத்த அருமையான சந்தர்ப்பம் சனிக்கிழமை இரவு பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி - நமது பேச்சாளர்தான் இரவு முழுவதும் நின்று விவாதிப்பதற்கும் தயார் என்று கூறியும் வெற்று வீராப்பு பேசிய பித்அத்வாதிகள் அதை அந்த இடத்தில் நிரூபித்து விவாதிக்க அல்லது ஆதாரத்தை கொண்டுவந்து காட்டுவதற்கு தயாராகவில்லை.
மீண்டும் சொல்கிறோம்.
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! இவர்கள் செய்யும் அனைத்தும் பித்அத்துக்கள் என்பதை பகிரங்க விவாதத்தில் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் நாம் நீரூபிக்கத் தயாராக இருக்கிறோம். சம்பந்தப் பட்டவர்கள் தயாரா?
வெளியீடு : ஸ்ரீ லங்கா தவ்ஹீ் ஜமாத் - கலாவெவ கிளை.
அந்நிகழ்ச்சியின் கேள்வி பதில் நிகழ்வின் வீடியோ காட்சியை இங்கு வெளியிடுகிறோம்.
0 comments:
Post a Comment