Sunday, October 16, 2011

ஜிஹாத் - ஓர் ஆய்வு.


ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 11)
அலீ (ரலி) சந்தித்த சவால்கள்.    
(சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் ஜிஹாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட இந்த ஆக்கம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி ஜிஹாத் பற்றிய தெளிவான புரிதலையும் கொடுத்தது. காலத்தின் தேவை கருதி அந்தத் தொடர் ஆய்வை நமது தளத்தில் வெளியிடுகிறோம். ஒரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தொடர் வெளியிடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். Rasmin M.I.Sc )


முஸ்லிம்கள் ஒருவரையொருவர் வெட்டிச் சாய்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் எந்தளவுக்கு எச்சரிக்கை செய்தார்கள் என்பதையும், அந்த எச்சரிக்கைக்கு மாற்றமாக முஸ்லிம் உம்மத் ஜிஹாதைத் தவறாக விளங்கி செயல்பட்டதால் உஸ்மான்(ரலி) அவர்கள் எவ்வாறு கொலை செய்யப்பட்டார்கள் என்பதையும் விரிவாக சென்ற தொடரில் பார்த்தோம்.

ஜிஹாதைத் தவறாகப் புரிந்து கொண்டதால் இஸ்லாமிய வரலாறு சந்தித்த இரத்தக் கறை படிந்த அத்தியாயங்களின் தொடரில் அலீ (ரலி) அவர்களின் ஆட்சியின் போது நடந்த துயர நிகழ்வுகளும் அமைந்துள்ளன.

அலீ (ரலி) அவர்களுக்கு பைஅத்.

உஸ்மான் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 35 ஆம் ஆண்டு துல்ஹஜ் மாதம் 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று ஷஹீதாக்கப்பட்டார்கள். அவர்களின் படுகொலையைத் தொடர்ந்து இஸ்லாமிய சமுதாயம் மிகப் பெரும் கொந்தளிப்பில் இருந்தது.

ஒரு புறம் முஆவியா (ரலி) உள்ளிட்ட ஒரு சாரார் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்குப் பழி தீர்க்கத் துடிக்கிறார்கள். மறு புறம் இஸ்லாமிய அரசின் தலைமைக்கான வெற்றிடம் என இஸ்லாமிய சாம்ராஜ்யம் குழப்ப மேகங்களால் சூழ்ந்து காணப்பட்டது.

இந்நிலையில் உடனடியாக ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் மதீனாவாசிகள் தவிக்கிறார்கள். உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யம் மதீனாவைத் தலை நகராகக் கொண்டிருந்தாலும் வடக்கே ஜோர்டான், சிரியா, துருக்கி, கிரேக்கத்தையும் தாண்டி இத்தாலி (ரோம்) எல்லை வரையிலும், தெற்கே எமன் வரையிலும், மேற்கே பாரசீகத்தைத் தாண்டி ஆப்கானிஸ்தான் வரையிலும், கிழக்கே தென்ஆப்பிரிக்கா வரையிலும் வியாபித்திருந்தது.

இஸ்லாமிய அரசின் எல்லை பரந்து விரிந்து காணப்பட்ட போதிலும் ஆட்சித் தலைமையை தீர்மானிக்கும் சக்தியாக மதீனா தான் விளங்கியது. அங்கு தான் மூத்த ஸஹாபாக்கள் பெரும்பாலோர் வசித்து வந்தனர். ஷூராக் குழுவும் அங்கு தான் இருந்தது.

எனவே தான் உஸ்மான் (ரலி) ஷஹீதாக்கப்பட்டவுடனேயே உரிய தலைவரைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு "பைஅத்'' செய்து, இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு தீர்வு காண வேண்டுமென மதீனாவாசிகள் துடித்தார்கள்.

தனக்குப் பிறகு ஆட்சித் தலைவராக வருவதற்குத் தகுதியுடையவர்கள் என உமர் (ரலி) அவர்கள் சுட்டிக்காட்டிய ஆறு பேரில், அப்போது அலீ (ரலி), தல்ஹா(ரலி), ஜுபைர் (ரலி), சஃது பின் அபீவக்காஸ் (ரலி) ஆகிய நான்கு பேர் உயிருடனிருந்தனர். அவர்களில் அலீ (ரலி) அவர்களின் பெயரே முதலிடத்தில் இருந்தது.

அன்றைய சூழ்நிலையில் அலீ (ரலி) அவர்களையே ஆட்சித் தலைவராக்க வேண்டும் என்ற கருத்தே மேலோங்கியது. அவரைத் தவிர தகுதி படைத்த வேறு யாரும் இல்லை. எனவே மதீனாவிலிருந்த ஸஹாபாக்களும், மதீனாவாசிகளும், அலீ (ரலி) அவர்களிடம் சென்று, அவர்களுக்குரிய சிறப்புத் தகுதிகளையெல்லாம் எடுத்துக் கூறியதோடு, அப்போது நிலவிய குழப்ப நிலைகளையும் முறையிட்டு அதற்குத் தீர்வு காண தாங்கள் தான் தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என்று வேண்டினார்கள்.

ஆனால் அலீ (ரலி) அவர்களோ முற்றிலும் நிராகரித்து விட்டு, தொந்தரவு தாங்க முடியாமல், "பனூ அம்ரு' தோட்டத்தில் ஒளிந்து கொள்கிறார்கள். ஹஸன் (ரலி) அவர்களும் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டாமென தம் தந்தையைத் தடுக்கிறார்கள்.

ஆனால் ஸஹாபாக்கள் அலீ (ரலி) அவர்களை விடுவதாக இல்லை. அவர்கள் ஒளிந்திருந்த செய்தியைக் கேள்விப்பட்டு, பனூ அம்ரு தோட்டத்திற்கே சென்று, கதவைத் தட்டி மீண்டும் அவர்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். வேறு வழியின்றி அலீ (ரலி) அவர்கள் "பைஅத்'தை ஏற்றுக் கொள்கிறார்கள்.

(குறிப்பு: இஸ்லாமிய அரசின் அதிபரிடம் குடிமக்கள் அளிக்கும் உறுதி மொழி பைஅத் எனப்படும்.)

முதன் முதலில் தல்ஹா (ரலி) அவர்களும், அதைத் தொடர்ந்து மதீனாவின் பிரமுகர்களும், ஸஹாபாக்களும் பைஅத் செய்கிறார்கள். இச்சம்பவம் அனைத்தும் உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட தினத்திலேயே (ஹிஜ்ரி 35 துல்ஹஜ் 18) நடக்கிறது.

மறு நாள் துல்ஹஜ் 19 அன்று மஸ்ஜிதுந் நபவியில் பொதுக் கூட்டத்தில் வைத்து ஏனைய மதீனாவாசிகள் அனைவரும் அலீ (ரலி) அவர்களிடம் பைஅத் செய்தார்கள். ஆனால் அன்சாரிகளில் (மதீனாவாசி) முக்கியமான 17 அல்லது 20 பேர் பைஅத் செய்ய மறுத்து விடுகிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்தகவர்கள், ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி), கஃபு பின் மாலிக்(ரலி), மஸ்லமா பின் முகல்லது (ரலி), அபூ ஸயீது (ரலி), முஹம்மது பின் மஸ்லமா(ரலி), நுஃமான் பின் பஸீர்(ரலி), ஜைத் பின் ஸாபித்(ரலி), ராஃபிவு பின் கதீஜ்(ரலி), ஃபலாலா பின் உபைத்(ரலி), கஃபு பின் உஜ்ரா(ரலி) ஆகியோர்.

அலீ (ரலி) அவர்களிடம் பைஅத் செய்ய விருப்பமில்லாத அன்சாரிகளில் ஒரு கூட்டம் எங்கே நாம் கட்டாயப்படுத்தப்பட்டு விடுவோமோ? என்று அஞ்சி, மதீனாவை விட்டே வெளியேறி, முஆவியாவைத் தேடி சிரியாவுக்குப் புறப்பட்டு விடுகிறது.

அலீ (ரலி) அவர்களிடம் சில சஹாபாக்கள் பைஅத் செய்யவில்லை என்பதற்காக அவர்களின் "கிலாஃபத்' (ஆட்சித் தலைமை) செல்லாது என்று கூறி விட முடியாது. ஏனென்றால் ஏற்கனவே அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகிய இருவருக்கும் சஃது பின் உபாதா (ரலி) அவர்கள் பைஅத் செய்யவில்லை. 

அதற்காக அவ்விருவரும் தலைமையை உதறி விடவில்லை. அந்த அடிப்படையில் அலீ (ரலி) அவர்களின் தலைமைப் பொறுப்பும் செல்லத்தக்கதே. மேலும் சிரியாவைத் தவிர்த்து கிட்டத்தட்ட ஏனைய மாகாணங்கள் அனைத்தும் அலீ (ரலி)யின் தலைமையை ஏற்றுக் கொண்டன.

அலீ (ரலி) அவர்களுக்கு பைஅத் செய்ய மறுத்த ஸஹாபாக்களில் பலரும், சிரியாவின் ஆளுநரான முஆவியா(ரலி)வும், உஸ்மான் (ரலி) கொலையாளிகளைத் தங்களிடம் ஒப்படைத்தால் பைஅத் செய்வதாகக் கூறியிருந்தார்கள்.

ஆனால் அச்சமயம் மதீனாவில் அவர்களின் கை ஓங்கியிருந்ததையும், இப்போது நடவடிக்கை எடுத்தால் நிலைமை விபரீதமாகி விடும் என்பதையும் எடுத்துச் சொல்லி, ஆட்சித் தலைமையை வலுப்படுத்திய பிறகு நடவடிக்கை மேற்கொள்வது தான் விவேகமான செயல் என்பதை அலீ(ரலி) எடுத்துக் கூறியும், அவர்கள் ஏற்க மறுத்து விட்டார்கள்.

மேலும் அலீ (ரலி) அவர்கள் தாமாக விரும்பியோ, பிறரைக் கட்டாயப்படுத்தியோ, வலிமையைப் பயன்படுத்தியோ தலைமைப் பொறுப்பை ஏற்கவில்லை. மாறாக மக்களே முடிவு செய்து, அப்பொறுப்பை அலீ (ரலி) அவர்கள் மீது திணிக்கத் தான் செய்தார்கள்.

மேலும் அலீ (ரலி) அவர்களுக்கும் முஆவியா(ரலி) அவர்களுக்கும் இடையே சிஃப்ஃபின் போர் நடந்த போது பைஅத்துர் ரிழ்வானில் நபி (ஸல்) அவர்களிடம் பைஅத் செய்த நபித்தோழர்களில் 800 பேர் அச்சந்தர்ப்பத்தில் அலீ (ரலி) அவர்களுடன் இருந்துள்ளார்கள் என இப்னு அப்தில் பர் அல் இஸ்தீஆப் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

அலீ (ரலி) அவர்களிடம் பைஅத் செய்த தல்ஹா(ரலி) அவர்கள் பஸராவின் ஆளுநராக தன்னை நியமிக்க வேண்டும் என்றும், ஜுபைர்(ரலி) அவர்கள் கூஃபாவின் ஆளுநராக தன்னை நியமிக்க வேண்டுமெனவும் நிபந்தனை விதித்தார்கள் என்று கூறப்படுவதாக இப்னுகஸீர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஒருவழியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், அலீ(ரலி) அவர்கள் முன்பாக மிகப்பெரும் சவால்கள் காத்துக் கிடந்தன. பல்வேறு பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க வேண்டியதாயிற்று.

அலீ(ரலி) சந்தித்த பிரச்சினைகள்

1. உஸ்மான்(ரலி) அவர்களின் கொலைக்குப் பழிதீர்த்தே தீருவது என்ற வெறியுடன் இரண்டு குழுக்கள் கிளம்புகிறது. ஒன்று சிரியாவிலிருந்து முஆவியா (ரலி) தலைமையிலான குழு, மற்றொன்று அன்னை ஆயிஷா(ரலி) தலைமையிலான குழு மக்காவிலிருந்து கிளம்புகிறது.

2. உஸ்மான்(ரலி) அவர்களுக்கு எதிராகப் புரட்சி செய்தவர்களும், அவர்களின் கொலையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டவர்களும், அதற்கு உறுதுணையாக இருந்தவர்களும் அலீ(ரலி) அவர்கள் விரும்பாத நிலையிலும், அவர்களுக்கு "பைஅத்' செய்திருந்தார்கள். இது உஸ்மான் (ரலி) ஆதரவாளர்கள் மத்தியில் அலீ (ரலி) அவர்களைப் பற்றி மேலும் அவதூறுகளைப் பரப்ப வாய்ப்பாக அமைந்தது. எந்த அளவுக்கென்றால் உஸ்மான்(ரலி) கொலையில் அலீ (ரலி) அவர்களுக்கும் பங்குண்டு என்ற அளவுக்கு கருதத் துவங்கி விட்டார்கள்.

அலீ (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும் இந்தப் பிரச்சனைகள் அவர்களுக்குப் பெரும் சோதனையாகத் திகழ்ந்தன.  

தங்கள் முன் எழுந்த இந்த சவால்களை அலீ (ரலி) அவர்கள் எப்படி எதிர் கொண்டார்கள்? 

அலீ (ரலி) அவர்களின் கிலாஃபத்திற்கு எதிராக அணி திரண்ட கூட்டங்களும், அலீ(ரலி) அவர்களின் படையும் மோதிக் கொண்டது எப்படி? 

என்னென்ன விளைவுகள் ஏற்பட்டது? 

அதிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் என்ன? என்பவற்றை  தொடர்ந்து பார்ப்போம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..........

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons