Thursday, October 27, 2011

ஜமாஅத் எடுக்கும் நடவடிக்கைகளுக்காக ?


நீங்கள் பதவியில் இருக்கும் போதும்,  இல்லாத போதும்பொதுக்குழு கூடி ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கும் போதுநடவடிக்கை எடுக்கப்பட்ட அனைவரும் தனிப்பட்ட உங்கள் மீது மட்டும் தரக்குறைவாக விமர்சனம் செய்கிறார்களே ஏன்?
(இதைப் பற்றி ஒருவரிடம் நான் விவாதித்த போதுபீஜே வாதத் திறமை உள்ளவர், பீஜே எதைச் சொன்னாலும் சரி தவறு என்று பார்க்காமல்தலையாட்டி பொம்மைகள்  ஒரு கூட்டம் இருக்கிறது; அந்த பொம்மைகளின்  ரிமோட்டாக பீஜே இருப்பதால் அவரை  விமர்சனம் செய்கிறார்கள் என்று அவர் கூறினார்) இதற்கு உங்கள் பதில் என்ன?
ஆரிப் ராஜா மங்கலம்பேட்டைதுபாய்
பதில்:
விமர்சனம் செய்யும் ஒவ்வொருவரும் தமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விமர்சனம் செய்வார்கள்.  தமிழகத்தில் எத்தனை அமைப்புகள் இருந்தாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போன்ற கட்டுக் கோப்பான அமைப்பு எதுவும் இல்லை. அதிகமான கிளைகளைக் கொண்டதும் அதிகமான செயல்பாடுகளைக் கொண்டதும் தவ்ஹீத் ஜமாஅத் தான்.

இந்த ஜமாஅத்தைப் பொருத்த வரை இதன் கொள்கை கோட்பாடுகளில் அதிருப்தி கொண்டு இதுவரை யாரும் வெளியேறியதில்லை. துர்நடத்தை காரணமாக நீக்கப்பட்ட சிலர் பின்னர் தமது செயல்பாடுகளுக்கு கொள்கைச் சாயம் பூசினாலும் அது உண்மையல்ல என்பது அனைவருக்கும் தெரியும். ஹாமித் பக்ரியோ
, பாக்கரோ, சைபுல்லாவோ நீக்கப்பட்ட முன்னாள் மாநில நிர்வாகிகளோ தாங்களாக இதில் இருந்து வெளியேறவில்லை. அவர்கள் வெளியேற்றப்பட்டிருக்கா விட்டால் அவர்கள் இந்த இயக்கத்தில் தான் இருந்திருப்பார்கள்.

வேறு கொள்கையில் இருந்தவர்கள் தமது தவறான கொள்கையில் இருந்து விலகி தவ்ஹீத் ஜமாஅத்தில் தம்மை இணைத்துக் கொண்டே வருகின்றனர். ஆனால் கொள்கையைக் காரணம் காட்டி இந்த ஜமாஅத்தில் இருந்து ஒருவரும் விலகியதில்லை. இதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்பது தான் நம்மை விமர்சனம் செய்பவர்களின் ஒரே நோக்கம். இதற்கு இவர்கள் கண்டு பிடித்த ஒரே வழிதான் என்னைத் தாக்குவது.

ஒரு தனி மனிதனைத் தாக்கி அவனது பெயரைக் கெடுத்து விட்டால் அவனுடன் இருந்தவர்கள் விலகி விடுவார்கள்
; அந்த இயக்கம் பலவீனப்படும் என்று இவர்கள் கருதுகிறார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தைப் பலவீனப்படுத்த இவர்கள் எடுத்துக் கொண்ட இந்த வழிமுறை மற்ற இயக்கங்களுக்குச் சரிப்பட்டு வரலாம். தவ்ஹீத் ஜமாஅத்துக்கு சரிப்பட்டு வராது. எனெனில் இந்த ஜமாஅத்தில் இருப்பவர்கள் இதன் கொள்கைக்காகத் தான் இதில் இருக்கிறார்கள். தனி நபருக்காக இல்லை.

மனிதன் என்ற முறையில் என்னிடம் தவறுகள் இருந்தால் அது ஜமாஅத்தைப் பாதிக்கும் வகையிலான தவறு என்றால் என்னை நீக்கி விட்டு அவர்கள் தமது பணியைத் தொடர்வார்கள். ஜமாஅத்தைப் பாதிக்காத தவறு என்றால் சகோதரத்துவத்துடன் சுட்டிக்காட்டி விட்டு ஜமாஅத்தில் நீடிப்பார்கள். இதற்கேற்றவாறு இந்த ஜமாஅத் தனது அடித்தளத்தை அமைத்துள்ளது. எனவே இவர்களின் விமர்சனத்தால் இவர்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது.

இந்த ஜமாஅத்தைப் பலவீனப்படுத்த நினைத்தால் அதற்கு ஒரு வழி உண்டு. அந்த வழியை அவர்களால் தேர்வு செய்ய முடியாது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை விட எல்லா வகையிலும் தங்கள் இயக்கத்தை மேம்படுத்திக் கொள்வது தான் அந்த ஒரே வழி. ஒழுக்கம் நாணயம் சுயநலமில்லா அர்ப்பணிப்பு தடம் புரளாத கொள்கை உறுதி ஆகியவற்றில் தவ்ஹீத் ஜமாஅத்தை இவர்கள் மிஞ்சினால் நானே தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து விலகி அதை விட சிறந்த இயக்கத்தில் சேரத் தயங்க மாட்டேன்.

ஆனால் அவர்கள் அப்படிச் செய்யாமல் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போகலாம் என்பதில் தான் இவர்கள் போட்டி போடுகிறார்கள். என்னுடைய வாதத் திறமை மூலம் எதையும் இந்த ஜமாஅத்தில் திணிக்க முடியாது. பாக்கர் நீக்கப்பட்ட போது நடந்த சேலம் செயற்குழுவில் பாக்கருக்கு நான் அதிக சலுகை காட்டியதாக குற்றச்சாட்டைத் தான் சந்தித்தேன். நான் நினைத்ததை எல்லாம் இந்த ஜமாஅத்தில் செயல்படுத்த முடியாது என்பதே உண்மை.

உணர்வு 16:03

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons