Thursday, October 27, 2011

ஒற்றுமையை எதிர்ப்பது ஏன்?


குர்ஆனுக்கு முரணாக உள்ள ஹதீஸ்களை விட்டு விடலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ள நீங்கள், குரானில் வலியுறுத்தப்பட்ட ஒற்றுமைக்கு  (3:103 ) இடையூறாக உள்ள ஒரு சில நபிவழிகளை நடைமுறைபடுத்துவதில் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்குறீர்கள் என்று நம்மை பார்த்து கேட்கும் சகோதரர்களுக்கு மார்க்கம் சொல்லக் கூடிய ஒற்றுமை தான் என்ன? விளக்கவும்.

- அபு ரியீபா, துபாய்

பதில் : திருக்குர்ஆனில் நீங்கள் குறிப்பட்ட வசனத்திலோ வேறு வசனங்களிலோ ஒற்றுமை பற்றி வலியுறுத்தப்படவில்லை. 
நீங்கள் சுட்டிக் காட்டும் வசனம் அனைவரும் சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்றுதான் கூறுகிறது. இது குறித்து நம்முடைய தமிழாக்கம் விளக்க குறிப்பில் நாம் இதை தெளிவு படுத்தியுள்ளோம்.
ஒற்றுமை எனும் கயிறு
தமிழகத்தில் நீண்ட காலமாக இவ்வசனம் (3:103) மேடைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சில மார்க்க அறிஞர்களும் கூட தவறாகவே இதைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்...என்று திருக்குஆன் கூறுவதாக இவ்வசனத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர்.
நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் இதன் அடிப்படையில் வாதிட்டு வருகின்றனர்.
இவர்களின் வாதத்திற்கு இவ்வசனத்தில் எள்ளளவும்  இடமில்லை. ஓர் ஊரில் அனைவரும் சினிமா பார்த்தால் வரதட்சணை வாங்கினால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்த தீமையை செய்யுமாறு அல்லாஹ் கூறுவானா என்று கூட இவர்கள் சிந்திக்கவில்லை.
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள்என்று தான் இவ்வசனம் கூறுகிறது. அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் அதன் விளக்க உரையான நபிமொழிகளும் தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆன், நபி வழியைப் பற்றிப் பிடியுங்கள் எனக் கூறும் வசனமே இது.
குர்ஆன் ஹதீஸில் உள்ளவைகளை எடுத்துச் சொல்வதால், ஒற்றுமை கெடுகின்றது; எனவே அதைச் சொல்லாதீர்கள்" என்று இவர்கள் நேர்மாறன விளக்கத்தைத் தருகின்றனர்.
அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப் பிடிக்க முன் வராவிட்டால் பிடியை நாம் விட்டுவிடக் கூடாது. அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும்.
ஒற்றுமை வாதம்தான் மனித குலத்தை நாசப்படுத்தும் நச்சுக் கிருமியாகும். அயோக்கியர்களையும் நல்லவர்களையும் சமநிலையில் நிறுத்தும் இந்த வாதம்தான் எல்லா தீமைகளுக்கும் ஆணிவேராக இருக்கிறது.
அல்லாஹ்வை வணங்கு எனக் கூறினால் அதனால் ஒற்றுமை கெடாது. அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது எனக் கூறினால் உடனே ஒற்றுமை கெடும். ஆனால் இஸ்லாம் ஒற்றுமைக்கு எதிரான இந்த நெகடிவ்-எதிர்மறை அடிப்படையில் தான் தனது ஏகத்துவக் கொள்கையை அமைத்துள்ளது. சிலை வணங்குபவனிடம் போய் இதை வணங்காதே எனக் கூறினாலும் தர்கா வணங்கியிடம் தர்காவை வணங்காதே எனக் கூறினாலும் மனிதனை வணங்குபவனிடம் இவனை வணங்காதே எனக் கூறினாலும் உடனே ஒற்றுமைக்குப் பங்கம் வந்து விடும். ஆனாலும் அதைத்தான் இஸ்லாம் மனித குலத்துக்கு போதிக்கிறது.
தீமையை தடுக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. நிச்சயம் இது ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கவே செய்யும்.
தீமைக்கு உதவாதீர்கள் என்றும் குர்ஆன் கூறுகிறது. இதுவும் ஒற்றுமைக்கு உலை வைக்கவே செய்யும்.
சொந்த பந்தங்களை விட கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் எனவும் குர்ஆன் கூறுகிறது, இதுவும் ஒற்றுமைக்கு எதிரானது தான்.
அனைவரும் சேர்ந்து குடிப்பதை விட அனைவரும் சேந்து ஒற்றுமையாக வரதட்சணை வாங்குவதை விட அனைவரும் சேர்ந்து அயோக்கியத்தனங்கள் செய்வதை விட அவர்களில் இருந்து நல்லவர்களைப் பிரித்து நல்லவர்களும் கெட்டவர்களும் ஒருக்காலும் சமமாக மாட்டார்கள் என்று பிரகடனப்படுத்தவே இஸ்லாம் வழங்கப்பட்டது.
தீமையை எதிர்க்கத் துணிவற்றவர்களும் வளைந்து கொடுப்பவர்களும் கண்டுபிடித்த பொய்யான தத்துவமே ஒற்றுமை வாதம்
ஒற்றுமை வாதம் என்னும் இஸ்லாத்துக்கு எதிரான நச்சுக் கிருமியை ஒழித்தால் தான் சமுதாயம் உருப்படும்

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons