வாழ்வையும் வாழும் வழிகளையும் அருள் செய்து வரும் இரட்சகன் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
அவர்களிடம் அறிவு வந்தபின்னும் தங்களுக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே தவிர அவர்கள் பிளவுபடவில்லை. (அல்குர்ஆன் 42:34)
இம்மை மறுமை உயர்வுக்கான இலகுவும் நேர்த்தியும் நிறைந்த வழிகாட்டுதல்களை வாழ்ந்து காட்டிய ஏக இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் ஈமானின் இறுதிநிலையாகும். (அபூ ஸயீது அல் குத்ரி (ரலி) முஸ்லிம் 78)
ஒற்றுமை கோஷம் என்பது இஸ்லாமிய சமுதாயத்தில் எப்போதாவது தோன்றிமறையும் வானவில் போன்ற சம்பவமாக இருந்து வருகிறது.வர்ணஜாலத்துடன் காட்சியளிக்கும் வானவில் கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியான ஆனந்தத்தைத் தந்துவிட்டு கொஞ்ச நேரத்திலேயே மறைந்து போய் விடும்.
அதுமாதிரி இஸ்லாமிய இயக்கங்கள் எனப்படுபவைகள் திடீரென்று ஒன்றுகூடி ஒரே தட்டில் சாப்பிட்டு விட்டு பொன்னாடையையும், புகழாரத்தையும் ஒருவருக்கொருவர் போர்த்திவிட்டு மக்களின் கண்ணுக்கும் மனதுக்கும் சற்றே இதமளித்து விட்டு காணாமல் போய் விடுகின்றன...
எந்தவொரு நிலைபாட்டையும் இஸ்லாமிய சமுதாயம் தேர்வு செய்ய வேண்டுமெனில் அது கொள்கை வழிப்பட்ட சிந்தனையிலும், எண்ணத்திலும் செயலாக்கமாக உருவாகினால் தான் இன்ஷாஅல்லாஹ் நிலைத்திருக்குமே தவிர ஊரையும் உலகத்தையும் மட்டும் மனதில் கொண்டு சமுதாய பொறுப்புகளில் அசைபோடுமேயானால் தடுமாற்றங்களிலேயே அது பல்லிளிக்கும்.
எந்த இரட்சகன் நம்மைப் படைத்தானோ அந்த அல்லாஹ்வின் திருப்பொருத்தங்களின் விலாசத்தை சரியாகப் புரிந்துக் கொண்டு பயணித்தால்தான் தேடல்களும் தீர்வுகளும் நிறைவைத் தரும். கொள்கையையும் கோட்பாடுகளையும் பின்னுக்குத் தள்ளி விட்டு சுயநலத்தையும் முகஸ்துதியையும் முன்னுக்கு வைத்தால் இலட்சியம் எங்கே வரும்? இலக்கை எப்படி அடைவோம்?
குர்ஆனும் ஹதிஸூம் நமக்கு வழிகாட்டும் வெளிச்சங்கள் என்ற எண்ணம் வலுவான அஸ்திவாரமாக இல்லாததனால் வழுக்குப் பாறையில் பிடிமானமின்றி ஏறுபவனைப் போன்று சமுதாய இயக்கங்கள் சறுகிப் போகின்றன.கூட்டம் முடிந்த கொஞ்ச நேரத்தில் எதிரெதிராய் நின்று உள்ளங்களால் இறுகிப் போகின்றன.இதனால் ஒற்றுமைப் போலியாகி உணர்வுகள் கேலியாகி நோக்கங்கள் கேள்விக்குறியாகி விடுகின்றன.
அல்லாஹ் தன்திருமறையில் கூறுகின்றான்:
நன்மையை ஏவி, தீமையை தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)
ஒரு மனிதன் ஷிர்க், பித்அத் போன்ற கேடுகெட்ட அனாச்சாரிய செயல்களை செய்தால் கூட அவனிடத்தில் உண்மை மார்க்கத்தை போட்டு உடைக்காமல் சொன்னால் ஒற்றுமை(?) போய் விடும் என்று அந்த தவறுகளில் தங்களையும் இணைத்துக் கொள்கின்றனர்.
வட்டி போன்ற கொடிய தவறுகளை செய்பவர்களாக இருப்பவர்களிடத்தில் தவறை சுட்டிக்காட்டி உணர்த்தினால் ஒற்றுமை போகிவிடும் என்று, சொல்லாமல் வாயிருந்தும் மௌனமாக இருக்கின்றனர்.
வரதட்சனை வாங்கும் திருமணங்களில் கலந்து கொண்டு அதனையே பள்ளிவாசல்களில் நடத்தி வைத்து அல்லாஹ்வும் ரஸூலும் கேலி செய்யப்பட்டாலும் பரவாயில்லை நாங்கள் ஒற்றுமை விரும்பிகள் என அவர்களுடன் இணைந்து சாப்பிட்டு ஒன்றாக கலந்து விடுகின்றனர்.
தேர்தலின்போது, எவ்வளவு கேடுகெட்டவர்களாக இருந்தாலும் முஸ்லிம்களைத்தான் நாங்கள் ஆதரிப்போம். அவர் மக்களுக்கு நன்மை செய்தாலும் பரவாயில்லை. மார்க்கத்தை விட்டு வெளியே செல்லும் அளவுக்கு தீமைகளை செய்தாலும் பரவாயில்லை. அந்த தவறை சுட்டிக்காட்டினால் ஒற்றுமை போய்விடும் என அவர்களை ஆதரிப்பதைப் பார்க்கின்றோம்.
இதுபோன்ற ஒற்றுமைகளைத்தான் சமுதாய ஒற்றுமை என வைத்திருக்கின்றார்கள்.இதனை ஆதரிக்கக்கூடிய போலிகள் இதில் அவர்களுக்கென சுயமான காரியங்கள் வரும்போது உதாரணமாக தேர்தலாக இருந்தால் முஸ்லிம்களுக்கு எதிராக இன்னொரு முஸ்லிமை நிறுத்தி விடுவார்கள். அப்போது எங்கு போனது சமுதாய ஒற்றுமை. சுய காரியங்களில் பிரிவை ஆதரிக்கின்றவர்களாக மார்க்கத்திற்காக பிரிய மனமில்லாதவர்களாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்களாக இருப்பவர்கள் தான் முற்றிலுமாக போலி ஒற்றுமைகளையே பேசுபவர்களைத் தவிர வேறில்லை.
நன்மையை ஏவுதல் என்பது குர்ஆனையும் ஹதீஸையும் மட்டும் சொல்லி மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைப்பது.
தீமையை தடுத்தல் என்பது நபி(ஸல்) அவர்கள் கூறியதைப்போல் தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இது தான் ஈமானின் இறுதி நிலை ஆகும் என நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள் (முஸ்லிம்-78).
இவர்கள் சொல்லும் நன்மையை ஏவுதல், தீமையை தடுத்தல் என்பது இஸ்லாமியன் ஒருவன் வட்டி வாங்கினால் அவனிடத்தில் போய் நீ அல்லாஹ்வை நம்ப வேண்டும். ஐந்து வேளை தொழுகைக்கு வர வேண்டும் என்று அனைவரும் ஏற்றுக் கொண்ட கருத்துக்களை சொல்வதைப் பார்க்கின்றோம். பித்அத் செய்பவனிடத்தில் எந்த தவறை செய்கின்றானோ அந்த தவறை சொல்வதுதான் நன்மையை ஏவுதல், தீமையை தடுத்தல். ஆனால் இவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டவற்றையே சொல்வதைப் பார்க்கின்றோம்.
உமக்கு கட்டளையிடப்பட்டதை தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (அல்குர்ஆன் 15:94)
தயவு தாட்சண்யமின்றி எடுத்து வைப்பதாலேயே அந்த இடத்தில் சமுதாய ஒற்றுமை குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விடும். அல்லாஹ்வையும் தூதரையும் பின்பற்றுகிறோம் என்று சொல்கின்றார்கள்.
மார்க்கம் சுட்டிக்காட்டிய தவறுகளை சமுதாய ஒற்றுமைக்காக செய்தால் அது தவறு கிடையாது என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் எங்கேயாவது கூறியிருக்கின்றார்களா? கிடையவே கிடையாது. இதிலிருந்தே தெரிகிறது நாங்களும் குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றுபவர்கள் என்று வாயளவில் மட்டும் தான் சொல்கின்றார்களே தவிர செயலில் கிடையாது. இது போன்றவர்களின் முகத்திரைகள் இந்த போலி ஒற்றுமையினை பேசுவதன் காரணமாக கிழிந்து தொங்குகின்றதை நாம் பார்க்கின்றோம்.
அல்லாஹ் கூறுகின்றான்:
கடல் ஓரத்தில் இருந்த ஊரைப்பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக!.சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு சோதித்தோம். அல்லாஹ் அழிக்கப்போகிற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்? என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் உங்கள் இறைவனிடமிருந்து தப்பிப்பதற்காகவும் அவர்கள் அஞ்சுவோராக ஆவதற்காகவும் என்று கூறினர்.
கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்தபோது தீமையைத் தடுத்தவர்களை காப்பாற்றினோம். அநீதி இழைத்தர்களை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம்.
தடுக்கப்பட்டதை அவர்கள் மீறியபோது, இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள் என்று அவர்களுக்குக் கூறினோம். (அல்குர்ஆன்: 7: 162,163, 164,165)
அதில் மூன்று கூட்டமாக பிரிகின்றனர்.
முதல்கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை மீறி சனிக் ;கிழமை கடலுக்குச் சென்று மீன் பிடிக்கின்றனர். இரண்டாவது கூட்டம் மீன் பிடிக்கச் சென்றவர்களை அல்லாஹ்வின் கட்டளையைச் சொல்லி தடுக்கின்றனர். மூன்றாவது கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை சொல்லி தடுக்கச் சென்ற இரண்டாவதுக் கூட்டத்தை இவர்கள் உனக்கு ஏன்? தேவையில்லாத வேலை? அல்லாஹ் பார்த்துக் கொள்வான் எனத் தடுக்கின்றனர்.
இந்த மூன்று கூட்டத்தினரில் அல்லாஹ் தண்டிக்கும்போது கட்டளையை மீறிய முதலாவது கூட்டத்தையும், தடுக்க சென்றவர்களை தடுத்த மூன்றாவது கூட்டத்தையும் சேர்த்து இழிந்த குரங்குகளாக மாற்றினான்.தீமைகளை தடுத்த இரண்டாவது கூட்டத்தை மட்டும் அல்லாஹ் காப்பாற்றினான்.
இதுபோன்றவர்களுக்கு சாட்டையடிக் கொடுக்கும் விதமாக அல்லாஹ்வின்
தூதர்(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது அவன் தடைவிதித்துள்ள ஒன்றை இறைநம்பிக்கையாளர் செய்வதுதான் ஆகும். (அபூஹூரைரா(ரலி) புகாரி 5223)
தான் மதிக்கப்படவில்லை என தனது சுய விருப்பு வெறுப்புக்களுக்காக ரோஷத்தை முன்னிறுத்தி சபையை புறக்கணித்து ஒற்றுமையைக் குலைக்க முன்வருகிறார்கள். ஆனால் அதே சபையில் அல்லாஹ்வும் அவனின் தூதரும் மதிக்கப்படாமல் கேலி செய்யப்படுகிறார்களே என்று அந்த சபையை அவர்கள் அல்லாஹ்விற்காக புறக்கணிக்கிறார்களா? என்றால் இல்லை. இதனைச் செய்ய தயங்குகிறார்கள் இந்த சமுதாய போலி ஒற்றுமை பேசக்கூடியவர்கள்.
அல்லாஹ்வின் கயிற்றை ஒற்றுமையாக சேர்ந்துப் பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து விடாதீர்கள்(அல்குர்ஆன் 3:103)
அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் ஹதிஸூம் தான் என்பது தெளிவாகின்றது. குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் அனைவரும் சேர்ந்துக் கொள்ளுங்கள். பிரிந்து விடாதீர்கள் என்பது தான் மார்க்க ஒற்றுமை என்பதை உணர்ந்துக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் தன் திருமறையில்:
தமது மார்க்கத்தைப் பிரித்து பல பிரிவுகளானோரின் எந்த காரியத்திலும் (முஹம்மதே) உமக்குச் சம்பந்தம் இல்லை. அவர்களின் விஷயம் அல்லாஹ்விடமே உள்ளது. பின்னர் அவர்கள் செய்துக் கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான். (6:159)
நூஹூக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான். (முஹம்மதே) உமக்கு நாம் அறிவித்ததும் இப்ராஹிம், மூஸா மற்றும் ஈசாவுக்கு நாம் வலியுறுத்தியதும் மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்! அதில் பிரிந்து விடாதீர்கள் என்பதே.(அல்குர்ஆன்42:13)
அவர்களிடையே அறிவு வந்த பின்னும் தங்களுக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே தவிர அவர்கள் பிளவுபடவில்லை. (அல்குர்ஆன் 42;:14)
இதுபோன்ற வசனங்களின் விளக்கங்களை பல வருடங்கள் படித்த இமாம்களின் உதவியோடுதான் புரிந்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அல்லாஹ் அவனுடைய வார்த்தையில் பாமரர்களும் புரியமாறு தெளிவாக கூறியுள்ளான்.
எனவே அல்லாஹ்வுக்கு மாற்றமான காரியங்களை யார் செய்வதைக் கண்டாலும் அதில் நாம் ஒற்றுமையை விரும்பக் கூடாது. அதில் பிரிவைதான் விரும்ப வேண்டும் என்று மேலே பார்த்த குர்ஆன் வசனங்கள் மற்றும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளில் இருந்து சந்தேகமில்லாமல் தெளிவாக உணரலாம்.
இந்தக் கொள்கையை சொன்னதன் காரணமாகவே நபிமார்களும் ஸஹாபாக்களும் சொல்லமுடியாத துயரத்திற்கு ஆளானார்கள். கொலை செய்யப்பட்டனர். அடி உதைகளுக்கு ஆளானார்கள். ஊர்விலக்கம் செய்யப்பட்டார்கள். வசைமொழிக்கு ஆளானார்கள். கேலி செய்யப்பட்டார்கள். கேவலப்படுத்தப்பட்டார்கள். இந்த கொள்கையில் உள்ளவர்களை எதிர்க்க மட்டும் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தனர். எவ்வளவுதான் கொடுமைகளை சந்தித்தாலும் அவர்கள் கொண்ட கொள்கையில் உறுதியானவர்களாக இருந்தார்கள்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் குர்ஆன் ஹதீஸ்களைப் பின்பற்றுவதால், இதுபோன்ற நிலைகளுக்கு ஆளாகக் கூடியவர்கள் யார்? எனக் கேட்டால் எதிர்க்கக் கூடியவர்களே ஒன்று சேர்ந்து சொல்வார்கள் தவ்ஹீத் ஜமாஅத் தான் என்று. இதனை யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
நாம் படக்கூடிய கஷ்டங்கள் நபிமார்கள், ஸஹாபாக்கள் பட்ட கஷ்டத்திற்கு ஒருபோதும் ஈடாகாது என்றாலும் இந்தக் கொள்கையை சொல்வதால் இது மாதிரியான கஷ்டங்கள் தான் வரும் என்பதை முந்தையக் கால நிகழ்வுகளால் நாம் அறிந்துக் கொள்ள முடிகிறது. இருக்கக்கூடிய இயக்கத்திலேயே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் குறைவான தவறுகளுடன் அதிகமதிகமான நன்மைகiயும் செய்யக்கூடிய இயக்கமாக இருக்கிறது. எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், யார் இருந்தாலும் போனாலும் இறுதி வரையிலும் குர்ஆனையும் ஹதீஸையும் மட்டும் பின்பற்றக்கூடிய, உள்ளதை உள்ளபடி யாருக்கும் வளைந்துக் கொடுக்காமல் சொல்லக்கூடிய நிலையில் இந்த இயக்கத்தில் உள்ளவர்களின் உள்ளத்தை அல்லாஹ் ஆக்குவானாக!
நாம் இம்மையில் யார் யாருக்காகவோ ஒற்றுமையாக இருக்கலாம். ஆனால் அல்லாஹ் சொல்லி தந்ததின் அடிப்படையில் இல்லாத ஒற்றுமையை ஒருபோதும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். பின்னர் மறுமையில் நாம் கைசேதப்பட்டவர்களாகவே நிற்க வேண்டிய நிலை வரும். எனவே வல்ல அல்லாஹ் நம்மை இதுபோன்ற போலிகளிடமிருந்து காப்பாற்றி, அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப் பிடிக்கக் கூடியவர்களுடன் ஒன்றிணைப்பானாக!
வெளியீடு எண்: 293 தேதி: 07.10.2011
அன்புடன் வெளியிடுவோர்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
துபை மண்டலம்
நோட்டீஸ் அன்பளிப்பு :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
லெப்பைகுடிக்காடு கிளை-துபை
0 comments:
Post a Comment