Wednesday, October 3, 2012

ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஊதுகுழலாக த.மு.மு.க.


உமர் (ரலி) அவர்கள் தேவாலயத்தில் தொழுதார்களா?:









கட்டுரையாளர் ஹாஜா கனி அவர்கள் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் நடந்ததாக பின்வரும் சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார். 

கலீபா உமர் காலத்தில் பாலஸ்தீனம் வெற்றிக்கொள்ளப்படுகிறது. வேதக்குறிப்புகளின்படி ஜெருசலேமின் சாவியை கலிபா உமரிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டுமெனக் கூறி, அவரை மதீனாவிலிருந்து ஜெருசலேமுக்கு வரவழைத்தப் பாதிரியார்கள் தொழுகை நேரத்தில் உயிர்த்தெழல் தேவாலயத்தில் உமரைத் தொழுமாறு கூறினர். "நான் இங்கு தொழுதால் எனக்குப் பின் வரும் தலைமுறையினர் எங்கள் தலைவர் தொழுத இடம் என உரிமை கோரலாம்' என்று கூறி அங்கே தொழுவதைத் தவிர்த்தார்கள்.

கட்டுரையாளர் கூறுவது போல் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக எந்த வரலாற்று நூற்களிலும் கூறப்படவில்லை. இது உமர் (ரலி) அவர்களின் மீது இட்டுக்கட்டிக் கூறப்பட்ட ஒரு கட்டுக் கதையாகும்.
இந்தச் சம்பவத்தை சிந்தித்துப் பார்த்தால் தேவாலயங்களில் தொழுவதைக் கூடும் என்று உமர் (ரலி) அவர்கள் ஆதரித்தார்கள் என்பதுதான் வெளிப்படுகிறது. ஏனென்றால் உமர் தொழுதால் பின்வரும் மக்கள் உரிமை கோரிவிடுவார்கள் என்ற எண்ணத்தில்தான் உமர் (ரலி) அவர்கள் தவிர்த்துக் கொண்டார்கள் என்றே இதில் கூறப்பட்டுள்ளது. தேவாலயங்களில் தொழுவது கூடாது என்ற அடிப்படையில் அல்ல.

உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் அல்லாத மக்களிடம் எவ்வளவு நீதமாக,நேர்மையுடன் நடந்து கொண்டார்கள் என்பதற்கு ஏராளமான உண்மைச் சான்றுகள் உள்ளன. ஆனால் கட்டுரையாளரோ உமர் (ரலி) அவர்கள் மீது இட்டுக்கட்டிக் கூறப்பட்ட ஒரு பொய்யான சம்பவத்தைச் சான்றாகக் காட்டியுள்ளார்.

சத்தியக் கொள்கையின் பாதுகாவலராகத் திகழ்ந்த அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்களை அசத்தியக் கொள்கையின் பாதுகாவலராக கட்டுரையாளர் சித்தரித்துள்ளார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக்கிய கிறித்தவர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் ஏற்படும் என்று சபித்துள்ளார்கள்.
மேலும் சமாதிகளை நோக்கியும், உருவப்படங்களை நோக்கியும் தொழுவதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.
இறைவனுக்கு இணைகற்பிக்கும் காரியங்கள் நடைபெறும் இடங்களில் இறைவனுக்குரிய வணக்க வழிபாடுகளைச் செய்வதற்கும் நபியவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது, அவர்களின் மனைவியரில் ஒருவர் அபிசீனியாவில் தாம் பார்த்த மாரியா எனப்படும் ஒரு கிறித்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினார். அப்போது (ஏற்கெனவே) அபிசீனியா சென்றிருந்த உம்முசலமா (ரலி), உம்மு ஹபீபா (ரலி) ஆகிய இருவரும் அதன் அழகையும் அதிலுள்ள ஓவியங்களையும் பற்றி வர்ணிக்கலாயினர். உடனே தலையை உயர்த்திய நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்துவிட்டால் அவரது அடக்கத்தலத்தின் மீது பள்ளிவாயில் எழுப்பி அதில் அவரது உருவப்படங்களை வரைந்து வைப்பார்கள்; அல்லாஹ்விடத்தில் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள் இவர்களே!என்று கூறினார்கள்.
நூல் : புகாரி (1341)

நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, "யூதர்களையும்,கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டனர்'' என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1330, 1390, 4441

கிறித்தவ ஆலயங்கள் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்குரிய இடம் அல்ல என்பதை நபியவர்கள் தெளிவாகக் கூறியிருக்கும்போது நபியவர்களின் நடைமுறைக்கு மாற்றமாக உமர் (ரலி) தேவாலயங்களில் தொழலாம் என்றும் வேறு காரணத்திற்காக நான் தொழவில்லை என்றும் கூறியிருப்பார்களா? நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மேற்கண்ட சம்பவம் உமர் (ரலி) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட சம்பவம்தான் என்பதை பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்தியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
உமர் (ரலி) அவர்கள் ஸாம் நாட்டிற்கு வருகை தந்தபோது ஒரு கிறித்தவர் அவர்களுக்கு உணவைத் தயார் செய்தார். அவர் உமர் (ரலி) அவர்களிடம் நீங்களும் உங்களுடைய தோழர்களும் என்னிடத்திற்கு வருகைதந்து என்னை சங்கை செய்வதை நான் விரும்புகிறேன்என்று கூறினார். அவர் ஸாம் நாட்டிலுள்ள அந்தஸ்து மிகுந்த மனிதர்களில் ஒருவராக இருந்தார். உமர் (ரலி) அவர்கள் அவருக்கு கூறினார்கள் : நாங்கள் உங்களுடைய தேவாலயங்களில் உருவங்கள் இருக்கின்ற காரணத்தினால் நாங்கள் அங்கே நுழைய மாட்டோம்என்று கூறினார்கள்.
நூல் : பைஹகி (பாகம் 2 பக்கம் 270)



கட்டுரையாளர் தான் எடுத்துக் காட்டும் ஆதாரங்கள் உண்மை என்று நம்பினால் அதை அவர் செயல்படுத்த தயாராக இருக்க வேண்டும். அதாவது கோவில்களிலும் தேவாலயங்களிலும் முஸ்லிம்கள் தொழலாம் என்று பத்வா கொடுப்பாரா? அது போல் நம்முடைய பள்ளிவாசல்களுக்குள் பிறமதத்தவர்கள் சாமி கும்பிடலாம் என்று பத்வா கொடுப்பாரா? முஸ்லிம்களுக்கு இப்படி அறிவுறை கூறுவாரா? மமகவுக்கு ஆதரவாக இருக்கும் உலமாக்கள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? நிச்சயமாக இப்படி இவர்கள் முஸ்லிம்கள் மத்தியில் கருத்துச் சொல்ல முடியாது. தாங்கள் நம்பாத ஒன்றை ஏன் இவர்கள் சொல்ல வேண்டும்?

முஸ்லிம்கள் மத்தியில் ஒரு கருத்தும் முஸ்லிமல்லாதவர்கள் மத்தியில் அதற்கு மாற்றமான ஒரு கருத்தும் சொலவது பச்சை முனாபிக்தனம் அல்லவா?

கிறித்தவ ஆலயங்களில் தொழலாமா?:
உருவச் சிலைகள் இருக்கின்ற காரணத்தால் உங்கள் ஆலயங்களில் நாங்கள் நுழைய மாட்டோம் என்று உமர் (ரலி) அவர்கள் (ஷாம் நாட்டுக் கிறிஸ்தவப் பிரமுகர் ஒருவரிடம்) கூறினார்கள். புகாரி434 ஆம் ஹதீஸின் பாடத் தலைப்பு
கிறித்தவ ஆலயங்களில் நுழைவதைக் கூட தவிர்த்துக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அங்கு தொழுவது கூடும் என்பதை ஆதரிப்பதைப் போன்று நடந்திருப்பார்களா?
உமர் (ரலி) அவர்களின் கொள்கைப் பிடிப்பைக் கேலி செய்கின்ற வகையில் அமைந்த பொய்யான கட்டுக்கதையை தமக்குச் சான்றாக கட்டுரையாளர் காட்டியிருப்பது அறியாமையின் உச்சகட்டமாகும்.
ஓட்டுப் பொறுக்கிகள் ஓட்டுக் கேட்கும்போது கோவில்களில் பரிவட்டம் கட்டி, திலகம் இடுவதை நியாயப்படுத்துவதற்காக இதுபோன்ற கட்டுக்கதைகளைப் புனைந்து இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்க முயல்கின்றார்கள்.
சங்பரிவாரம் காலாகாலமாகச் சொல்லிவரும் சித்தாந்தத்துக்கு இஸ்லாமியச் சாயம் பூசுகின்றார் கட்டுரையாளர். முஸ்லிம்கள் மீது மன்னிக்க முடியாத அவதூறை இவர் சுமத்தியுள்ளார். கலீபா உமர் (ரலி) அவர்களின் சம்பவம் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். உமர் (ரலி) அவர்கள் தொழுதார்கள் என்பதற்காக அதில் உரிமை கொண்டாடும் அளவுக்கு முஸ்லிம்கள் கேடுகெட்டவர்களாக இருப்பார்களா?
ஒரு இடத்தில் ஒருவர் தொழுதால் அந்த இடம் அவர்களுக்குச் சொந்தம் என்று கடுகளவு மூளையுள்ள எந்த முஸ்லிமாவது சொல்வானா?
நமது பள்ளிவாசல்கள் எல்லாம் இப்படி பிறமத மக்களிடமிருந்து அடித்துப் பிடுங்கியதுதான் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் நச்சுக்கருத்தை கட்டுரையாளர் பக்குவமாக விதைக்கின்றார்.
எந்தப் பொருளும் முறையாக விலைக்கு வாங்கப்பட்டால், அல்லது அன்பளிப்பாகப் பெறப்பட்டால் மட்டுமே உரிமையாக முடியும். பிறருக்குச் சொந்தமான இடத்தைத் தட்டிப்பறிக்க எந்த முஸ்லிமுக்கும் அனுமதி இல்லை எனும்போது, பள்ளிவாசலுக்காக அதை அபகரிப்பது கூடுமா?
முஸ்லிம்கள் இப்படி நடப்பார்கள் என்று உமர் (ரலி) அவர்கள் கூறியிருப்பார்களா?
----------------------------------------------------------
இன்னும் தோலுரிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்....
முந்தைய ஊதுகுழலை ஊத இங்கே சொடுக்குங்கள் ....
https://www.facebook.com/photo.php?fbid=266536783450060&set=a.108142159289524.9326.100002812208775&type=1&relevant_count=1
---------------------------
https://www.facebook.com/photo.php?fbid=266786006758471&set=a.108142159289524.9326.100002812208775&type=1&relevant_count=1

----------------------------
 

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons