Monday, October 22, 2012

இஸ்லாத்தை நிலை நாட்டும் போர் வாள்கள்


மார்க்கத்தில் பிறந்த நாள் கொண்டாடுவது தடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு முதல் காரணம் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என்பது யூத கிறிஸ்தவ வழிமுறை. அவர்கள் மூலம் வழி வழியாக வந்தது தான் இந்த கொண்டாட்டம் அதன் வழி தோன்றல் என்ன என்பதை உணராத இன்றைய முஸ்லிம்கள், அதை செய்தால் என்ன தவறு என்று கேட்டுக்கொண்டு கொண்டாடி வருகிறார்கள்.
பிறந்த நாள் என்பது நபியின் காலத்திலும் இருந்த ஒரு நிகழ்வு தான். இது கொண்டாடப்பட வேண்டிய ஒரு காரியமாக இருந்திருந்தால் அதை முதலில் நபி (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள் அல்லது செய்ய சொல்லியிருப்பார்கள் அல்லது சஹாபாக்கள் செய்ததை அங்கீகரிதிருப்பார்கள்.

இதில் எதையும் நபி (ஸல்) அவர்கள் செய்யாததிலிருந்து அது முழுக்க முழுக்க யூத நசாராக்களின் கலாசாரம் என்பதை அறிய முடிகிறது. ஈசா நபி காலம் தொட்டே இந்த பிறந்த நாள் கலாசாரம் யூத கிறிஸ்தவர்களிடையே இருந்து வந்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னும் இரண்டு காரணங்களால் பிறந்த நாள் கொண்டாடுவது தவறு. 

ஒன்று , அது ஒரு மூட நம்பிக்கை. நீ இன்று பிறந்ததால் உனக்கு வாழ்த்துக்கள் என்று சொல்வதில் அறிவுக்கு பொருத்தமான எந்த வாதமும் இல்லை ! அவர் பிறந்து முப்பது வருடங்கள் ஆகியிருக்கும். அவர் பிறந்த அந்த குறிப்பிட்ட நாளில் வாழ்த்து சொன்னால் தான் அதில் அர்த்தம் இருக்கிறதே தவிர, இதன் பிறகு இந்த தேதி இதற்கு பிறகு இந்த மாதம் என்று நாமே ஒரு காலண்டரை அமைத்து வைத்துக்கொண்டு, இதோ நீ பிறந்த தேதி மீண்டும் வந்து விட்டது, ஆகவே உனக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னால் அது ஒரு மூட நம்பிக்கை அல்லாமல் வேறென்ன??

தேதியும் மாதமும் ஒத்து போய் இருப்பதால் வாழ்த்து சொல்கிறோம் என்று சொல்பவர்கள் வருடம் ஒத்து போகவில்லை என்பதை சிந்திக்கவில்லை ! 
வருடம் ஒத்து போகவில்லை என்றாலும் பரவாயில்லை, தேதியும் மாதமும் ஒத்து போய் விட்டதல்லவா, ஆகவே கொண்டாடலாம் என்று சொல்பவர்கள், வருடத்தை விட்டு விட்டு மாதத்தையும் தேதியையும் வைத்து பிறந்த நாள் கொண்டாடுபவர்கள்,  மாதத்தை விட்டு விட்டு, ஒவ்வொரு மாதமும் ஒத்துப்போக கூடிய  தேதியில் பிறந்த நாள் கொண்டாடுவார்களா? அல்லது, தேதியும் மாதமும் ஒத்து போக வேண்டும் என்பது போல பிறந்த கிழமையும் ஒத்து போக வேண்டும் என்பதற்காக வாரா வாரம் கொண்டாடுவார்களா?
இதிலெல்லாம் அறிவுடன் செயல்படுவார்களாம்  !, இப்படி கொண்டாடுவதெல்லாம் மூட நம்பிக்கையாம் !!!! என்னே இவர்களது அறிவு.


பிறந்த நாள் கொண்டாடுவது தவறு என்பதற்கான அடுத்த காரணம், அது ஒரு போலி கொண்டாட்டம். வாழ்த்துக்கள் என்றோ happy birthday என்றோ சொல்வதில் யாருமே உண்மையாக இருக்கவில்லை. 
காரணம், ஒரு குழந்தை பிறந்த அந்த ஒரு நாள் தான் ஒவ்வொரு மனிதனுக்கும் மகிழ்ச்சியே தவிர, அதன் பிறகு வரக்கூடிய எந்த பிறந்த நாளும் சம்மந்தப்பட்டவனுக்கு மகிழ்ச்சியை தராது என்பது தான் யதார்த்தம் ! 
நாற்ப்பது வயதில் இருந்து நாற்ப்பது ஒன்றாவது பிறந்த நாளை ஒருவன் அடைகிறான் என்றால் ஒரு வயது அவனுக்கு அதிகமாகியுள்ளது என்று பொருள். 
வயது அதிகமாவதை எந்த மனிதனும் கவலையோடு தான் எதிர் கொள்வானே தவிர, வயது அதிகரிப்பது உலகில் எந்த மனிதனுக்கும் ஆனந்தத்தை தராது. மேலும், ஒரு வருடம் அதிகமாகியுள்ளது என்றால் மரணம் இன்னும் அருகில் வந்து விட்டது என்கிற சாதாரண உண்மையும் இதில் அடங்கி உள்ளது. உலகில் வாழக்கூடிய எவருமே மரணத்தை விரும்புபவர்களும் அல்லர் !
ஆக, எந்த வகையிலும் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது அறிவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றேயல்ல !!
சிந்திக்கிற அறிவு பெறாத மிருகங்கள் இது போன்ற மூட நம்பிக்கையில் இல்லை, சிந்திக்கிற அறிவு பெற்ற மனிதன் மூட நம்பிக்கையில் இருக்கிறான் !!

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons