Wednesday, November 9, 2011

ஜாக், தமுமுக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு வரலாற்றுப் பார்வை பாகம் -1


இப்பிரசுரம் தஞ்சை வல்லம் மாநாட்டின் போது ஷம்சுள்ளுஹா அவர்களால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டதாகும். தவ்ஹீத் கொள்கையில் புதிதாக இணைந்துள்ள சகோதரர்களுக்கு இந்த வரலாறு தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக அதை நமது தளத்தில் வெளியிடுகிறோம்.
                       இறைவன் திருப்பெயரால்

தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சி

1980களுக்கு முன்னால் தமிழக முஸ்லிம்களின் நிலையும், தமிழக உலமாக்களின் நிலையும் எவ்வாறு இருந்தது என்பதை இன்றைய இளைஞர்கள் அறிய மாட்டார்கள்.
தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கை அவர்களிடமிருந்து அறவே எடுபட்டுப் போயிருந்தது. திருக்குர்ஆனிலும், நபிவழியிலும் அனுமதிக்கப்படாத போலிச் சடங்குகளைத் தான் இஸ்லாம் என்ற பெயரால் தமிழக முஸ்லிம்கள் செய்து வந்தனர். மத்ஹபு என்ற பெயரால் முரண்பட்டுக் கிடந்தனர். போலி ஷைகுமார்களின் கால்களில் விழுந்து வணங்குவதை பெரும் பாக்கியமாகக் கருதி வந்தனர்.
இந்தக் காலகட்டத்தில் தான் மயிலாடுதுறை அருகில் அமைந்துள்ள சங்கரன்பந்தல் என்ற கிராமத்திலிருந்து தவ்ஹீத் பொறி பற்றத் தொடங்கியது.
பைஜுல் உலூம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த அரபுக் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்த இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த பி.ஷைகு அலாவுத்தீன் எனும் பி.எஸ். அலாவுத்தீன், அவரது சகோதரர் மல்லவி பி.ஜைனுல் ஆபிதீன் ஆகியோர் அந்த அரபுக்கல்லூரியில் படித்துக் கொடுப்பதோடு நின்று விடாமல் மக்களை நல்வழிப்படுத்த மாதந்தோறும் தெருமுனைக் கூட்டங்களை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலானார்கள்.
தீன் விளக்கக் குழு என்ற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதுடன் துண்டுப் பிரசுரங்கள் வாயிலாகவும், அவ்வூரில் நிலவிய மூடநம்பிக்கைகளை எதிர்த்து வந்தனர்.
மேலப்பாளையத்தைச் சேர்ந்த மவ்லவி ஷம்ஸுல் லுஹா, மவ்லவி முஹம்மது அலி ரஹ்மானி, மவ்லவி யூசுப் மிஸ்பாஹி போன்றவர்களும் சங்கரன்பந்தல் சிராஜுத்தீன், அப்துல் பத்தாஹ் போன்ற நண்பர்களும் இப்பிரச்சாரத்துக்குப் பக்கபலமாக இருந்தனர்.
இவர்களில் யூசுப் மிஸ்பாஹி கொள்கையில் முரண்பட்டு ஜாக் இயக்கத்தில் இன்னும் இருக்கிறார்.
இந்த நிலையில் 1984ல் தஞ்சை நகரில் ஆற்றங்கரைப் பள்ளிவாசல் வளாகத்தில் தமிழக உலமாக்கள் சபை சார்பில் வலிமார்கள் மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் உரையாற்றிய எல்லா உலமாக்களுமே தர்கா வழிபாட்டை ஊக்குவித்தும் ஆதரித்தும் பேசினார்கள். ஏகத்துவ சிந்தனைவாதிகளின் இரத்தம் சூடேற்றும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபாதகச் செயலை நியாயப்படுத்தினார்கள்.
அதைக் கண்டு கொதித்துப்போன பி.ஜைனுல் ஆபிதீன், அம்மாநாட்டில் ஆற்றப்பட்ட உரைகள் அனைத்தும் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் எதிரானவை என்பதைத் தக்க ஆதாரங்களுடன் "ஒரு நாடகம் அரங்கேறியது'' என்ற ûலைப்பில் கடுமையாக விமர்சனம் செய்து ஒரு பிரசுரம் வெளியிட்டார்.
ஒரு நாடகம் அரங்கேறியது என்ற பிரசுரத்தை வாசிக்க
அப்பிரசுரத்தால் ஆத்திரம் அடைந்த உலமாக்கள் வேன்களில் வந்து இறங்கி சங்கரன்பந்தலில் பணியாற்றும் பி.ஜைனுல் ஆபிதீனை மதஸாவில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி முறையிட்டனர். கல்லூரி நிர்வாகம் அதை ஏற்க மறுத்துவிட்டாலும் உலமாக்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்று சில கட்டுப்பாடுகளை விதித்தது.
சங்கரன்பந்தலில் தவ்ஹீத் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழகத்தில் வேறு சில பகுதிகளிலும் பிரச்சாரம் நடத்தப்பட்டு வந்தது.
குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் மவ்லவி கமாலுத்தீன் மதனி,
கடையநல்லூரில் மவ்லவி அப்துல் ஜலீல் மதனி,
பேர்ணாம்பட்டில் பி.அன்வர்பாஷா, ரபீக் அஹ்மது தலைமையிலான குழுவினர்,
கோவையில் அப்துல் மாஜித் உமரி,
திருச்சியில் அப்துல் மஜீத், அப்துல் சமத் தலைமையிலான குழுவினர்,
சென்னையில் உஸ்மான் கான் தலைமையிலான குழுவினர்
பிரச்சாரம் செய்து வந்தனர்.
இவர்களில் மவ்லவி அப்துல் ஜலீல் மதனி கொள்கையில் உறுதியாக நின்று மரணித்து விட்டார். மவ்லவி கமாலுத்தீன் மதனி, ரபீக் அஹ்மது, அப்துல் மாஜீத் உமரி, அப்துல் மஜீத், அப்துல் சமத், உஸ்மான் கான் ஆகியோர் கொள்கையில் முரண்பட்டு ஜாக் இயக்கத்தில் இருந்து வருகின்றனர். அன்வர் பாஷா அவர்கள் இன்று வரை தடம் மாறாமல் உறுதியுடன் நம்மோடு இருந்து வருகிறார்.
சங்கரன்பந்தலில் பி.ஜைனுல் ஆபிதீன் தெளிவாகப் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று கேள்விப்பட்டு மேற்கண்ட பகுதிகளில் உள்ளவர்கள் அவரைப் பேச்சாளராக அழைத்து பொதுக் கூட்டங்கள் நடத்தினார்கள். இதனால் அவர்களுக்கிடையே அறிமுகமும், ஒருங்கிணைப்பும் ஏற்பட்டது.
இதே காலகட்டத்தில் துபையில் இஸ்லாமிய விழிப்புணர்வு மையம் ..சி என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. இவர்களும் தமிழ் கூறும் துபை வாழ் மக்களிடம் ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்து வந்தனர்.
மவ்லவி முஹம்மது இக்பால் மதனி, லெப்பைக்குடிகாட்டைச் சேர்ந்த ஜஹாங்கீர், கள்ளக்குறிச்சி சுலைமான், மேலப்பாளையம் பழ்லுல் இலாஹி உள்ளிட்டவர்கள் இஸ்லாமிய விழிப்புணர்வு மையத்தை நடத்தி வந்தனர்.
(இவர்களில் ஜஹாங்கீர் கொள்கையில் உறுதியாக நின்று மரணித்து விட்டார். மற்றவர்கள் கொள்கையில் முரண்பட்டு நமக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றனர்.)
நஜாத் மாத இதழ்
தமிழகத்தின்  சில பகுதிகளில் தவ்ஹீத் பிரச்சாரம் நடந்தாலும் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் எழுத்தும், பேச்சும் பாமரர்களுக்கும் புரியும் வகையில் எளிய நடையில் தக்க ஆதாரங்களுடன் இருந்ததை ஒலி நாடாக்கள் மூலமும், துண்டுப் பிரசுரம் மூலமும் துபை இஸ்லாமிய விழிப்புணர்வு மையத்தினர் கண்டறிந்தனர்.
சங்கரன்பந்தல் மதரஸாவில் தொடர்ந்து பணியாற்ற முடியாத அளவுக்கு கெடுபிடிகள் அதிகமானதால் அங்கிருந்து வெளியேறும் எண்ணத்தில் இருந்த பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களை ..சி இயக்கத்தினர் நேரிலும் தபால் மூலமும் தொடர்பு கொண்டனர்.
"உங்கள் எழுத்தாற்றலைப் பயன்படுத்தி ஏன் மாத இதழ் ஒன்றை நடத்தக் கூடாது'' என்று அவர்கள் பி.ஜைனுல் ஆபிதீனிடம் கேட்டனர். தவ்ஹீத் அடிப்படையில் நடத்தப்படும் பத்திரிகைகளை இலாபகரமாக நடத்த முடியாது என்று பி.ஜே சொன்ன போது "மாதம் மாதம் எவ்வளவு நட்டம் ஏற்படுகிறதோ அதை நாங்கள் தந்து விடுகிறோம். நீங்கள் மதஸாவை விட்டு வெளியேறி பத்திரிகை நடத்த முன் வாருங்கள்'' என்று கேட்டுக் கொண்டனர்.
"எழுதுகின்ற பணியை மட்டும் தான் என்னால் ஏற்க முடியும், பண விவகாரத்தை வேறு யாரிடமாவது ஒப்படைத்துக் கொள்ளுங்கள்'' என்று பீ.ஜே திட்டவட்டமாகக் கூறி விட்டார்.
அதன் பின்னர் திருச்சி அப்துல் சமத், அப்துல் மஜீத் தலைமையில் செயல்பட்டு வந்த திருச்சியில் வாட்ச் ரிப்பேர் கடை வைத்திருந்த அபூ அப்துல்லாஹ் என்பவரை நிர்வாகம் செய்ய ..சி இயக்கத்தினர் நியமித்தனர்.
..சி யின் சார்பில் அந்நஜாத் என்ற மாத இதழ் துவக்கப்பட்டது. அதன் எழுத்துப் பொறுப்பு முழுவதும் பீ.ஜே.யைச் சேர்ந்தது. இந்த இதழ் தமிழகத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது. வளைகுடா நாடுகளில் வாழ்ந்தவர்கள் தங்கள் குடும்பத்திற்காக ஏராளமான சந்தாக்களை அனுப்பி பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவினார்கள். இதன் காரணமாகவே தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக் கொள்பவர்களை நஜாத் கூட்டம் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.
பத்திரிகையின் மாபெரும் வளர்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. ..சிக்கும் அபூ அப்துல்லாஹ்வுக்கும் மத்தியில் பண விஷயத்தில் விவகாரம் ஏற்பட்டது. ..சி பக்கம் நியாயம் இருந்ததால் ..சி பக்கம் பீ.ஜே நின்றார். மற்ற ஆரம்பகால பிரச்சாரகர்களும் ஐ.ஏ.சி பக்கம் நின்றனர்.
அபூ அப்துல்லா நஜாத் பத்திரிகையைத் தனது சொந்தப் பத்திரிகை என்று சட்டப்படி பதிவு செய்து கொண்டதால் அவர்களால் நியாயம் பெற முடியவில்லை. அந்த அநியாயத்துக்குத் துணை போகக் கூடாது என்று பீ.ஜே நஜாத் பத்திரிகையிலிருந்து வெளியேறினார். பல்லாயிரம் பத்திரிகைகள் விற்பனையை சில நூறு பிரதிகளில் கொண்டு வந்த அபூ அப்துல்லா அதைக் கோமா ஸ்டேஜில் நிறுத்தினார். அவரும் அவருடன் இருந்த சிலரும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டனர்.

ஜாக் உதயம்

அதே காலகட்டத்தில் தான் தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே பிரச்சாரம்  செய்தவர்கள் கூட்டமாக ஒரு அமைப்பை உருவாக்கி ஏன் செயல்படக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.
அனைவரும் திருச்சியில் உள்ள தேவர் ஹாலில் (இது இப்போது இல்லை) கூட்டப்பட்டு அஹ்லுல் குர்ஆன் வல்ஹதீஸ் (ஆக்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பி.ஜைனுல் ஆபிதீன் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இந்த இயக்கம் ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (ஜாக்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஓராண்டுக்குப் பின் தனக்கு தலைமைப் பொறுப்பு வேண்டாம். பொறுப்பு இருப்பதால் அதிகமான பிரச்சார நிகழ்ச்சிகளுக்குச் செல்ல முடியவில்லை என்று பீ.ஜே மறுத்து கமாலுத்தீன் மதனியைத் தலைவராக்குமாறு வலியுறுத்தினார். மக்கள் இதைக் கடுமையாக எதிர்த்தாலும் பீ.ஜே தனது நிலையை மாற்றிக் கொள்ள விரும்பாததால் வேண்டா வெறுப்பாக கமாலுத்தீன் மதனி தலைவராக்கப்பட்டார்.
அதன் பின்னர் கமாலுத்தீன் தலைமையில் பி.ஜைனுல் ஆபிதீன், சம்சுல்லுஹா, அலி ரஹ்மானி உள்ளிட்ட பல அறிஞர்கள் தீவிரப் பிரச்சாரகர்களாகச் செயல்பட்டனர்.
மவ்லவி அப்துல்லா என்பவர் மதுரையில் புரட்சி மின்னல் என்ற பெயரில் பத்திரிகை நடத்தி வந்தார். ஏகத்துவப் பிரச்சாரத்தால் கவரப்பட்ட அவர் தனது பத்திரிகையை ஏகத்துவக் கொள்கையைப் பிரதிபலிக்கும் இதழாக நடத்த முன்வந்தார். ஏற்கனவே அந்நஜாத் பத்திரிகையை இழந்து புதிய பத்திரிகை ஆரம்பிக்கும் திட்டத்தில் இருந்த ..சி  இயக்கத்தினர் மவ்லவி அப்துல்லாஹ்வின் விருப்பத்தை ஏற்று புரட்சி மின்னலைத் தத்தெடுத்தனர். பி.ஜைனுல் ஆபிதீன் மற்றும் உலமாக்களுடைய ஆக்கங்களைத் தாங்கி புரட்சி மின்னல் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

எதிர்ப்பு வலுத்தது

மேடைப் பிரச்சாரம் மூலமாகவும் புரட்சி மின்னல் பத்திரிகை வழியாகவும முடுக்கி விடப்பட்ட தீவிரப் பிரச்சாரம் காரணமாக மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டது போல் எதிர்ப்பும் அதிகமானது.
பள்ளிவாசலில் தொழத்தடை, ஊர் நீக்கம், அடக்கு முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்தன.
உலமாக்களால் தூண்டி விடப்பட்ட மார்க்கம் அறியாத மக்கள் தவ்ஹீத் பிரச்சாரம் நடக்கும் இடங்களில் கலவரங்களை ஏற்படுத்தினார்கள்.
பீ.ஜே அவர்கள் முத்துப்பேட்டை, நாகூர், மதுரை, சென்னை, முரார்பாத், பொதக்குடி, பண்டாரவாடை, லெப்பைக்குடிக்காடு, தேங்காய்ப் பட்டிணம், கோவை எனப் பல ஊர்களில் தாக்கப்பட்டார். மேலப்பாளையத்தில் கொலை முயற்சியில் மேடையேறி அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். மற்ற பிரச்சாரர்களும் ஆங்காங்கே தாக்கப்பட்டனர்.
அந்தத் தடைகளைக் கண்டு தவ்ஹீத் பிரச்சாரர்களும் கொள்கைவாதிகளும் நிலை மாறவில்லை. முன்பை விட இன்னும் உறுதியுடனும், தீவிரமாகவும் பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர்.
நன்றாகப் போய்க் கொண்டிருந்த பிரச்சாரத்தில் அரபு நாட்டு நிதியை மையமாக வைத்து பிரச்சனை தலைதூக்கியது.
ஜாக் தலைவராக இருந்த கமாலுத்தீன் மதனியும், மதீனாவில் படித்த மற்ற மதனிகளும், சவூதி அரசிலிருந்து சம்பளம் பெற்று வந்தனர். இந்தத் தொடர்பைப் பயன்படுத்தி சவூதி அரசுடன் தொடர்பு கொண்டு ஜாக் இயக்கத்துக்கு நிதியாரங்களைப் பெற முயன்றனர். எந்த நிகழ்ச்சி நடந்தாலும் மேடையில் அரபு மொழியில் பெரிய பேனரைக் கட்டி அதை வீடியோவாக்கி அதை சவூதிக்கு அனுப்புவது மட்டுமே குறிக்கோளாக ஆனது.
அரபு நாட்டிலிருந்து உதவிகள் பெற வேண்டாம் என்று பீ.ஜேயும் மதனிகள் அல்லாத மற்ற பிரச்சாரகர்களும் மறுப்புத் தெரிவித்ததால் பீஜேயை அழைக்காமலே ஆலோசனைக் கூட்டம் நடக்கலானது.
அரபு நாட்டுப் பணம் வர ஆரம்பித்துள்ளது என்பதற்காக இயக்கத்திலே சேர்ந்தவர்கள் சுய ஆதாயத்துக்காக அரபுநாட்டு நிதி உதவி பெறுவதை ஆதரித்து தூபம் போட்டனர். பள்ளிவாசல், மதரஸா, நோன்புக் கஞ்சி, தஃவா என்று பல வகைகளில் இலட்சம் இலட்சமாகப் பணம் வர ஆரம்பித்தது. என்ன வரவு என்பதும், என்ன செலவு என்பதும மதீனாவில் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும் தான் தெரியுமே தவிர, ஜாக் மாநில நிர்வாகிகளுக்குக் கூட தெரியாத நிலை ஏற்பட்டது.
தங்களுக்குக் கமிஷன் கிடைக்கிறது என்பதற்காக தவ்ஹீத்வாதிகளே இல்லாத ஊரிலும் பள்ளிவாசல் கட்டப் பணம் வாங்குவது மட்டுமே இவர்களின் குறிக்கோளாக ஆனது. ஆனாலும் சிரமப்பட்டு உருவாக்கிய இயக்கம் பாழாகி விடக்கூடாது என்பதற்காக பிரச்சாரகர்கள் உள்ளிருந்து போராடி வந்தனர்.
கோவை அய்யூப் உள்ளிட்ட பலர் மீது பொருளாதார மோசடி போன்ற குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் பீ.ஜே யால் எடுத்துக் காட்டப்பட்டும் அவர் மேலான நிலைக்கு உயர்த்தப்பட்டார். அதற்கு கமாலுத்தீன் மதனியும் உடந்தை என்பது உறுதியானது.
இதை பின்வரும் லின்குகளில் இருந்து அறியலாம்
அரபு நாடுகளில் நிதி உதவி பெறக்கூடாது என்பதில் பிரச்சனை ஆரம்பித்தாலிம் அதன் பின்னர் மேலும் பிரச்சனைகள் உருவாயின. அதாவது கணக்கு வழக்குகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். அனைத்து சகோதரர்களுக்கும் உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டு அவர்களுக்கு தட்டிக் கேட்கும் அதிகாரம் இருக்க வேண்டும். தலைமைப் பொறுப்பு நிரந்தரமாக ஒருவரிடம் இருக்கக் கூடாது என்பன போன்ற பிரச்சனைகள் உருவாயின.
அரபு நாடுகளில் உதவி பெறக் கூடாது;
நிரந்தரமாக பொறுப்பில் இருக்கக் கூடாது;
கொள்கைவாதிகளுக்கு தட்டி கேட்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்;
அதற்காக உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும்
என்பன போன்ற கோரிக்கைகளை கமாலுத்தீன் மதனி ஏற்க மறுத்தார். இதனால் இவர்களுடன் சேர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது.
மற்ற நிர்வாகிகளுக்குக் கூடத் தெரியாமல் வரவு செலவு வைப்பது முறையா? நீங்கள் மரணித்துவிட்டால் என்னவாகும் என்று கமாலுத்தீன் மதனியிடம் பீ.ஜே நேரடியாகக் கேட்ட போது, "எல்லாக் கணக்குகளும் என் மனைவிக்குத் தெரியும்'' என்று கமாலுத்தீன் மதனி பதிலளித்தார். இவர் நிர்வாகிகளிடம் கூட கணக்குக் காட்டத் தயார் இல்லை என்றால், இதைவிட மோசடி இருக்க முடியாது என்ற எண்ணம் தவ்ஹீத் பிரச்சாரத்தில் முன்னணியில் இருந்த அனைத்து பிரச்சாரகர்களுக்கும் ஏற்பட்டது.
இதே காலகட்டத்தில் தான் அல்ஜன்னத் என்ற மாத இதழ் துவக்கப்பட்டது. ..சி இயக்கத்தின் ஆதரவில் புரட்சி மின்னல் நடத்தப்பட்டாலும் தன் பொறுப்பில் ஒரு இதழ் இருந்தால் நல்லது; இன்னும் அழுத்தமாக செய்திகளைச் சொல்ல முடியும என்று நினைத்து பீஜேயால் அல்ஜன்னத் மாத இதழ் ஆரம்பிக்கப்பட்டது.
பீ.ஜேயின் சொந்தப் பத்திரிகையாக அவரது சொந்தப் பொறுப்பில் அல்ஜன்னத் நடத்தப்பட்டது. அதில் கிடைக்கும் லாப நட்டம் பீ.ஜேயைச் சேர்ந்தது என்ற அடிப்படையில் தான் அல்ஜன்னத் நடத்தப்பட்டது.
பத்திரிகையின் விற்பனை அதிகமாக இருந்தாலும், பத்திரிகையின் ஏஜெண்டுகள் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் நாளுக்கு நாள் நட்டம் அதிகரித்தது. இனிமேல் தொடர்ந்து நடத்துவது என்றால், மக்களிடம் நன்கொடை திரட்டித் தான் நடத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. நன்கொடை கேட்டு மக்களிடம் அறிவிப்புச் செய்தால் கடந்த கால நட்டத்தையும் ஈடு செய்யலாம். இனியும் நட்டமில்லாமல் நடத்தலாம் என்று நண்பர்கள் ஆலோசனை கூறினார்கள்.
பத்திரிகையின் லாப நட்டம் ஜமாஅத்தைச் சேர்ந்தது என்றால், நன்கொடை கேட்கலாம். எனக்குச் சொந்தமான பத்திரிகை எனும் போது நன்கொடை கேட்க மாட்டேன் என்று பீ.ஜே மறுத்து விட்டார். நான் ஆக்கங்களை எழுதித் தருகிறேன்; ஜாக் இதன் உரிமையைப் பெற்றுக் கொண்டு மக்களிடம் நன்கொடை பெற்று நடத்திக் கொள்ளட்டும் என்று பீ.ஜே விட்டுக் கொடுத்தார். இதற்காக எந்தத் தொகையையும் அவர் கேட்கவில்லை.
இதன் பின்னர் ..சி யின் சார்பில் புரட்சி மின்னலும், ஜாக் சார்பில் அல்ஜன்னத்தும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வலம் வந்தன. பின்னர் புரட்சி மின்னல் இதழ் அல்முபீன் என்று  பெயர் மாற்றப்பட்டது. அதுவே தற்போது ஏகத்துவம் இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்தக் காலகட்டத்தில் ஷிர்க், பித்அத், லஞ்சம், லாட்டரி, சினிமா போன்ற தீமைகளை மட்டுமே எதிர்த்துப் பிரச்சாரம் அமைந்தது. அரசியல், சமுதாயப் பிரச்சனைகளில் நாம் ஆர்வம் காட்டவில்லை.

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons