Tuesday, November 15, 2011

ஜாக், தமுமுக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு வரலாற்றுப் பார்வை பாகம் -3


தவ்ஹீத் பிரச்சாரக் குழு உதயம்

துளைத்தெடுத்த துரோகங்கள், வரம்பு மீறிய வாக்குமீறல்கள், அடுக்கடுக்கான அவமானங்கள் இவ்வுளவுக்குப் பிறகும் இவருடன் இருக்க இயலாது என்பதை விட இவர் நம்முடன் இருக்க விரும்பவில்லை, நம்மை வெளியேற்ற விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொண்டோம்.
வெளிநாட்டுத் தொடர்புகள், தொடர் வரவுகள் இவையெல்லாம் அவருக்குத் தன்னிறைவையும், தலைக்கனத்தையும் ஏற்படுத்தியிருந்தன. அதனால் ஜாக்கிலிருந்து வெளியேறி தவ்ஹீத் பிரச்சாரக் குழு என்ற இயக்கத்தைக கண்டோம். தமுமுக என்ற அமைப்பு நம்மிடம் இருந்தாலும் தவ்ஹீதுக்கு என்று தனி அமைப்பு இருக்கட்டும் என்றெண்ணி இந்த அமைப்பைத் துவக்கினோம். அதற்கு ஹாமித் பக்ரி தலைவராக இருந்தார். அதன் பிறகு நான் தலைவராக நியமிக்கப்பட்டேன்.
(ஹாமித் பக்ரி இரகசியமாகச் செயல்படும் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து துரோகம் செய்ததால் அவரும் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த அமைப்பின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது, செய்யது முஹம்மது மதனீ, ஆர்.டி.ஓவில் பணிபுரிந்த பஷீர் ஆகியோரின் முயற்சியில், நாகர்கோவில் ஹனீபா நகர் பள்ளிவாசலில் ஒரு சமரசக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதை சகோதரர் எம்.எஸ். சுலைமான் முன்னின்று ஏற்பாடு செய்தார்.
இந்த சமரசக் கூட்டத்திற்கு வரமாட்டேன் என்று கமாலுத்தீன் முரண்டுபிடித்தார். கடைசியில் ஒருவாறாக அவரைப் பள்ளியில் கொண்டு வந்து சேர்த்தனர்.
வாதப்பிரதிவாதங்கள்! இறுதியில் பீ.ஜே இரண்டு கோரிக்கைகளை அல்லது நிபந்தனைகளை முன்வைத்தார்.
1. ஜாக்கில் உள்ள கொள்கைவாதிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும். (நாங்கள் ஜாக் என்று சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை நிலை இருந்தது. பி.ஜே உட்பட அனைவருக்கும் இந்தக் கதி! எனவே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது)
2. நிர்வாகச் சீரமைப்பு
இன்னும் இது போன்ற சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன.
இதற்குப் பதிலளித்த எஸ்.கமாலுத்தீன் நான் இதை ஏற்றுக் கொள்கிறேன்; ஆனால் அவர்கள் தவ்ஹீத் பிரச்சாரக் குழுவை உடனே கலைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதற்கு பி.ஜே நாங்கள் தவ்ஹீத் பிரச்சாரக் குழுவைக் கலைக்க மாட்டோம். ஆனால் மூன்று மாதங்களுக்கு இந்தப் பெயரில் செயல்பட மாட்டோம். அதற்குள் எங்கள் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும். காரணம், அடிக்கடி எஸ்.கமாலுத்தீன் இப்படி வாக்குறுதி கொடுத்துவிட்டு மாறு செய்வார். வாக்குறுதியை மீறுவார். எனவே தவ்ஹீத் பிரச்சாரக் குழுவைக் கலைக்க மாட்டோம். இந்த மூன்று மாதங்களுக்குள் நாங்கள் வைத்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பி.ஜே கேட்டுக் கொண்டார். அதற்கு நாங்கள் பொறுப்பு என்று சமரசக் குழுவினர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஆறப்போட்டு நாறடித்தல்

ஆறப்பட்டு நாறடிக்கும் கலையில் வல்லவர் நரசிம்மராவ். ஆனால் அவரை மிஞ்சிய ஒருவர் இருக்கிறார் என்றால் அது எஸ் எஸ்.கமாலுத்தீன் மதனி தான். காலை வாருவதில் கை தேர்ந்த கமாலுத்தீன் மதனி வழக்கம் போல் இந்த சமரச முயற்சியிலும் காலை வாரினார். இம்முயற்சியில் இறங்கியவர்களின் முகத்தில் கரியைப் பூசினார்.
இனிமேல் நாம் நமது வழியில் தவ்ஹீதைச் சொல்வோம் என்று பிரச்சாரக் குழு என்ற பெயரிலேயே தவ்ஹீத் பணி தொடர்ந்தது. தவ்ஹீத் இயக்கத்தில் இருந்து கொண்டே சத்தியப் பணியையும் சமுதாயப் பணியையும் சேர்த்து செய்ய வேண்டும் என்று எங்கள் முயற்சி, கமாலுத்தீனின் வறட்டுப் பிடிவாதத்தாலும் வாக்குமீறல்களாலும் தோற்றுப் போயிற்று! நாங்கள் வளர்த்த ஜாக்கை விட்டு விட வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்பதை எடுத்துக் காட்டவே இந்தச் சுருக்க வரலாறு. இப்போது சமுதாயப் பணிக்காகத் தொடங்கிய தமுமுகவின் வரலாற்றைப் பார்ப்போம்.

அவரசப் பிரசவம்

தமுமுக ஓர் அவசரப் பிரசவம் எனினும் அது அரைகுறைப் பிரசவமல்ல! முழுமையாகப் பிறந்த குழந்தை! ஏற்கனவே இருந்த சமுதாய இயக்கங்கள் அழிந்ததற்கான காரணங்களைக் கண்டறிந்து, அது போன்ற காரணங்கள், கரையான்கள் இதை அண்டக் கூடாது, அணுகக் கூடாது என்பதில் முழுக் கவனம் செலுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தான் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று கொள்கையாகக் கொள்ளப்பட்டது.
இதனால் தமுமுகவின் ஒவ்வொரு அறிமுக்க் கூட்டங்களிலும் அடுத்த கட்டக் கூட்டங்களிலும், "நாங்கள் உங்களிடம் ஒரு போதும் எங்களுக்காக ஓட்டுக் கேட்டு வர மாட்டோம்'' என்று வாக்குறுதி அளித்தனர். "எங்களுக்கு வாக்குக் கேட்டால் எங்களைச் செருப்பால் அடியுங்கள்'' என்று கூடப் பேசியதுண்டு. இப்படி ஓர் உறுதியான குரலில், உச்சஸ்தாயில் பேசியது மக்களுடைய உள்ளங்களில் ஊடுறுவியது.

தவ்ஹீத் ஒரு தடைக்கல்லா?

வெகு வேகமாக இந்த இயக்கம் மக்களிடம் வளர்ச்சி கண்டது. இத்தனைக்கும் பி.ஜே ஒரு பக்கா தவ்ஹீத்வாதியாக இருந்தும் (தமுமுக வளாச்சிக்கு தவ்ஹீத் ஒரு போதும் தடைக்கல்லாக இருக்கவில்லை) தமுமுக மேடையில் சமுதாயப் பிரச்சனைகளை மட்டும் பேசுவோம்; அங்கு தவ்ஹீதைப் பேச மாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்கினார். அதன்படி அந்த இயக்கம் பெருவளர்ச்சி கண்டது.

தனிஇட ஒதுக்கீடும் தவ்ஹீத் ஜமாஅத்தும்

தமுமுக என்ற இந்த சமுதாய இயக்கத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், ஆணிவேராகவும் அமைந்தது இடஒதுக்கீடு கொள்கை தான். பாபரி மஸ்ஜித் முதல் அனைத்துப் பிரச்சனைகளுக்கும், முஸ்லிம்கள் கிள்ளுக்கீரைகளாக நடத்தப்படுவதற்கும் காரணம் சுதந்திரத்திற்குப் பிறகு, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு பறிக்கப்பட்டது தான் என்பதைக் கருத்தில் கொண்டு இடஒதுக்கீடு கோரிக்கையைக் கையில் எடுத்தது. இட ஒதுக்கீடு கிடைத்துவிட்டால் தமுமுகவைக் கலைத்து விடுவோம் என்று கூட மக்களிடம் அறிவிக்கப்பட்டது.
இந்த இட ஒதுக்கீட்டைக் கையில் எடுத்ததும், ஏற்கனவே சரிந்து விழுந்த சமுதாயம், "இது சாத்தியமா?'' என்ற கேள்வியை எழுப்பினார்கள். சாத்தியமே என்று கூறி அதை மூலை முடுக்குகளுக்கு அதன் பேச்சாளர்கள் எடுத்துச் சென்றார்கள்.

தவ்ஹீத் தாயீக்கள்தான் தமுமுக பேச்சாளர்கள்

இடஒதுக்கீட்டுக் கொள்கையை மக்களிடம் எடுத்துச் சென்றவர்கள் யார்? அவ்வியக்கத்திற்கென்று பேச்சாளர்கள் கிடையாது. நாவலர், பாவலர் கிடையாது. வாணியம்பாடி வாத்தியார் மட்டும் பாடம் நடத்துவார். அதுவும் இந்தியாவைத் தாண்டி, செசன்யா, கஜகஸ்தான் என்று தான்.
இந்த இயக்கம் மக்களிடம் போய்ச் சேருவதற்கு தவ்ஹீத் தாயீக்கள் தான் முதலீடானார்கள். அவர்கள் தான் இந்த இடஒதுக்கீடு கொள்கையை எட்டுத் திக்குகளுக்கும் எடுத்துச் சென்றார்கள்.

விழிப்புணர்வை ஏற்படுத்திய விஜய் டிவி பேட்டி

இடஒதுக்கீடு என்றால் என்ன? அதன் பயன் என்ன? என்ற விளக்கங்கள் கூட சமுதாயத்திற்குத் தெரியாமல் இருந்தது. காயிதேமில்லத்திற்கு மணிமண்டபம் கட்டுவதையும், மீலாது நபிக்கு விடுமுறை அறிவிப்பதையும் முஸ்லிம் சமுதாயத்திற்குச் செய்த மிகப்பெரிய சாதனைகளாகக் கருதப்பட்ட காலம் அது.
இப்படிப்பட்ட காலத்தில் தான் விஜய் டி.வியில் பி.ஜேயின் பேட்டி ஒளிபரப்பானது. "மணி மண்டபங்கள் கட்டுவதால், காயிதே மில்லத் சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைப்பதால் முஸ்லிம்களுக்கு என்ன பயன்? முஸ்லிம்கள் வாழ்வுரிமை இழந்து நிற்கிறார்கள். வயிற்றுக்கு உணவில்லாமல் நிற்கிறார்கள். மண்டபம் கட்டினால் முஸ்லிம்களின் பசி போய்விடுமா? எங்களுக்குத் தேவை இடஒதுக்கீடு தான்'' என்று ஆணியடித்தாற்போல் பி.ஜே கூறிய போது, அவரைப் பேட்டி கண்ட ரபி பெர்ணாட் என்பவர் அதிர்ந்து போனார்.
முஸ்லிம்களிடம் இப்படி ஒரு கோரிக்கை இருப்பதே அப்போது தான் உலகுக்குத் தெரிய வந்தது. அந்தப் பேட்டி ஒளிபரப்பானவுடன் சட்டசபையில் கருணாநிதி அதற்குப் பதிலளித்துப் பேசினார். நாங்கள் தான் முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் என்று வழக்கம் போல் பல்லவி பாடினார். அதன் பிறகு இந்தத் தீ தமிழகமெங்கும் பற்றிக் கொண்டது.
தவ்ஹீத் பள்ளிவாசல்களின் ஜும்ஆ மேடைகளில் இடஒதுக்கீடு பற்றிப் பேசப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இதற்குப் பிறகு எல்லா அரசியல் கட்சிகளும் இந்தக் கருத்தை எதிரொலிக்க ஆரம்பித்தன.

பாபரி மஸ்ஜித் மீட்புக் கோரிக்கை

இடஒதுக்கீட்டிற்கான குரல் ஒரு பக்கம் ஒலித்துக் கொண்டிருந்த போது, இன்னொரு பக்கத்தில் பாபரி மஸ்ஜித் மீட்புக்கான போராட்டங்களை தமுமுக தொடர்ந்து நடத்தியது.
பாபரி மஸ்ஜித் இடிந்து விழுந்தது போலவே, அதை மீண்டும் எழுப்ப வேண்டும் என்ற எண்ணமும் இடிந்து விழுந்திருந்தது. அதை மறக்க முற்பட்டனர்.
 அப்போது தான் தவ்ஹீத் பேச்சாளர்கள் வெள்ளி மேடைகளிலும், இதர சொற்பொழிவு மேடைகளிலும், யார் தனது பொருளைப் பாதுகாப்பதற்காக போரிட்டுக் கொல்லப்படுகின்றானோ அவன் ஷஹீத் ஆவான் என்ற ஹதீஸையெல்லாம் ஆதாரமாகக் காட்டி, பாபரி மஸ்ஜிதை மீட்பதற்காகப் போராட வேண்டும்; அதற்காகப் போர்க்குரல் கொடுக்க வேண்டும் என்று தூண்டினர். மஸ்ஜிதை மீட்பதற்கு முன்பாக மக்களை மறதியிலிருந்து மீட்டனர்.
இதன் விளைவாய் மக்கள் கடல் கடந்து அலை போல் டிசம்பர் 6ம் தேதி நடைபெறும் போராட்டங்களில் திரண்டனர். இந்தப் போராட்டங்கள் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

முதல்வர் வீட்டு முற்றுகை

ஒரு டிசம்பர் 6 அன்று அப்போதைய முதல்வர் கருணாநிதி வீட்டை முற்றுகையிட வேண்டும் என்று தமுமுக அறிவித்தது. அதற்கும் தவ்ஹீத்வாதிகள் தயாரானார்கள். அந்த அளவுக்கு தர்பியாக்கள் நடத்தப்பட்டன.
அந்த தர்பியாக்களில் மரணத்திற்கு அஞ்சாத தியாகிகள் பற்றிப் போதிக்கப்பட்டன. குறிப்பாக மூஸா நபியவர்களிடத்தில் போட்டிக்கு வந்த மந்திரவாதிகள் ஈமான் கொண்டு, ஃபிர்அவ்னால் தண்டிக்கப்பட்ட வரலாறு பற்றிப் போதிக்கப்பட்டது. அதனால் தான் முறுக்கேறிய நரம்புகளுடன் முதல்வர் வீட்டு முற்றுகைக்கு தவ்ஹீத்வாதிகள் தயாரானார்கள். காக்கிச் சட்டை பயம் கழற்றி எறியப்பட்டது. இதற்கான அடிப்படையே தவ்ஹீத்தான். தவ்ஹீத் இல்லையேல் இந்தத் தெம்பு, திராணி, துணிச்சல் அவர்களுக்கு ஒரு போதும் ஏற்பட்டிருக்காது.           
முதல்வராயிருந்தும் தன் வீட்டை முற்றுகையிடுவதைக் கருணாநிதியால் தடுக்க முடியவில்லை. கடுமையான கைது நடவடிக்கைகள், தடுப்புச் சுவர்கள், துப்பாக்கிச் சூடு நடக்கும் என்ற மிரட்டல்கள் இவையனைத்தையும் மிஞ்சி குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கொள்கைவாதிகள் குவிந்தனர்; கைது செய்யப்பட்டனர். இப்படிப் பாபரி மஸ்ஜித் மீட்புப் போர் மக்களிடம் துவக்கி வைக்கப்பட்டது.
இதன் மாபெரும் பயன், பாபரி மஸ்ஜித் மீட்கப்பட்டதோ இல்லையோ ஆனால் சங்பரிவாரங்களின் பட்டியலில் இருந்த காசி, மதுரா போன்ற பள்ளிவாசல்கள் மீது அவர்கள் கை வைக்க அஞ்சினர்.

இதர பிரச்சனைகளுக்காக எழுச்சிப் போராட்டங்கள்

கடந்த காலத்தைப் போன்றில்லாமல் சமுதாயத்தில் யார் அநியாயமாகக் கைது செய்யப்பட்டாலும் வீதியில் இறங்கும் வீரத்தைத் தந்தது தவ்ஹீத் கொள்கை. வீறு கொண்டு எழ வைத்தது. முஸ்லிம்களின் சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளில் அநீதி, அக்கிரமம் இழைக்கப்பட்ட போது ஆர்த்தெழும் போர்க்குணத்தை ஊட்டியது தவ்ஹீத் கொள்கை தான்.

தடையைத் தாண்டிய தமுமுக

இக்கட்டத்தில் தான் வாழ்வுரிமை மாநாடு! இதன் பயனாய் தடையிலிருந்து தப்பியது. தமிழக வட்டத்தில் மட்டுமின்றி டெல்லியிலும் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை எதிரொலிக்கச் செய்தது.
இதன் பின்பு அவ்வப்போது தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் தமுமுக நிர்வாகிகளுக்கும் அவ்வப்போது உரசல் ஏற்பட்டது. இந்தக் கட்டத்தில் தான் மதுரை தமுக்கம் மைதானத்தில் தவ்ஹீதுக்கான ஒரு மாநாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு உதயமாகின்றது.

நஞ்சைக் கலக்கிய தஞ்சை பேரணி

இதன் பின்பு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தஞ்சையில் இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி தமுமுக ஒரு பேரணியை நடத்தியது. இந்தத் தஞ்சை பேரணியில் கலந்து கொண்ட மக்கள் கூட்டம் அந்த இயக்கத்தின் நிர்வாகிகளின் உள்ளத்தில் நஞ்சைக் கலக்கியது. இந்தக் கூட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தவ்ஹீத்வாதிகளை வெளியேற்ற வேண்டும் என்று தப்புக் கணக்குப் போட ஆரம்பித்தனர். அரசியல் கட்சிகளின் சகவாசங்கள் அவர்களின் உள்ளங்களில் மாற்றத்தைக் கொண்டு வந்தன. அரசியல் கட்சியினர் காணும் கனவுகளை இவர்களும் காணத் துவங்கினர்.
இதற்கு முந்தைய இயக்கங்கள் நீர்த்துப் போவதற்கும் நிர்மூலமானதற்கும் அடிப்படைக் காரணம் தேர்தலில் போட்டி என்ற நிலைபாடு தான். அதனால் தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற நிலைபாட்டை தமுமுக அடிப்படைக் கொள்கையாகக் கொண்டது. அந்த நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதில் பி.ஜே கண்ணும் கருத்துமாக இருந்தார்.
1. தேர்தலில் பங்கெடுப்பதைத் தடுக்கும் பி.ஜேயின் நடவடிக்கைகள்.
2 தமுமுகவின் தனித்தன்மையைத் தக்க வைப்பதிலும், பிற இயக்கங்களுடன் கலந்து விடாமல் அதைத் தடுக்க பி.ஜே கொண்டிருந்த கரிசனம், காட்டிய கண்டிப்பு
3. தமுமுக தலைவர்களிடம் நாள்பட நாள்பட தலைதூக்கிய தவ்ஹீத் கொள்கையிலேயே சமரசம் செய்யும் உணர்வு, இன்னும் சொல்லப் போனால் தவ்ஹீத் எதிர்ப்புணர்வு
ஆகியவை ஏற்கனவே உரசலில் இருந்ததை விரிசலாக்கியது. விளைவு! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உதயமானது.
தவ்ஹீத் கொள்கை தான் தமுமுக வளர்ச்சிக்குத் தடை என்று எழுதியே கொடுத்தனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உதயம்

அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! தவ்ஹீத்வாதிகளுக்கு, குறிப்பாக தவ்ஹீத் தாயீக்களுக்கு இது உண்மையில் ஒரு விடுதலை உணர்வை அளித்தது.
தவ்ஹீத்வாதிகளை மூலதனமாகக் கொண்டு வளர்க்கப்பட்ட ஒரு இயக்கத்தில் சமுதாய நலனுக்காக தவ்ஹீதை இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும் அநியாயத்திலிருந்து விடுதலை! அதாவது கண்ணை விற்று ஓவியம் வாங்கும் அக்கிரமத்திலிருந்து ஒரு விடுதலை! இந்த அநியாயங்களுக்கு விடுதலை இயக்கமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உதயமானது. அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் என்பது பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தாக உருவெடுத்தது.
இந்த இயக்கத்தில் கண் தான் பிரதானமானது. சித்திரம் இரண்டாவது என்றானது. தவ்ஹீத் என்ற கண்ணுக்குத் தான் இங்கு முன்னுரிமை! முதலுரிமை! மற்றவை பின்னுக்கு!
எந்தச் சமுதாய நலனுக்கு தவ்ஹீத் கொள்கை பாதகமாக உள்ளது என்று நம்மை வெளியே தள்ளினார்களோ அந்த சமுதாயப் பணிகளுக்குத் தவ்ஹீத் ஒரு தடைக்கல் அல்ல என்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துவங்கிய இரண்டாண்டு காலத்தில் கும்பகோணத்தில் நிரூபித்தோம்.
இது குறித்து முழு உண்மை அறிய

குலுங்கியது கும்பகோணம்

"குடந்தை குலுங்கட்டும்'' என்று சொன்னோம். தவ்ஹீதை இந்த இயக்கம் முன்வைத்த காரணத்தால், நாம் இரண்டாவதாகக் கொண்ட ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டான். குடந்தை குலுங்கட்டும் என்ற வார்த்தையை அவன் ஒப்புக் கொண்டான். இல்லையெனில் இவ்வளவு கூட்டத்தைக் கொண்டு வந்து குவித்திருப்பானா?
தவ்ஹீத் என்ற பெயரை நமது இயக்கத்தின் பெயரிலேயே தாங்கிக் கொண்டு, சமுதாயப் பிரச்சனைகளுக்காக அழைத்தால் மக்கள் வருவார்களா? என்ற ஐயம் தவ்ஹீத்வாதிகளிடம் இருந்தது. ஆனால் அந்த ஐயத்தை உடைக்கும் விதமாக, மக்களைக் கொண்டு வந்து கொட்டுகிறேன் என்று அல்லாஹ், குடந்தையைக் குலுங்க வைத்தான்.
தேர்தல் நேரத்தில் எங்களுக்காக வாக்குக் கேட்டு உங்களிடம் வர மாட்டோம் என்று சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுபவர்கள் இவர்கள் தான் என்று நம்மை நம்பி மக்கள் பெருக்கெடுத்தார்கள். காவிரியைத் தாங்க முடியாத குடந்தை இந்த மக்கள் கடலைத் தாங்குமா? என்ற கேள்வி எழுமளவுக்கு கும்பகோணத்தில் மக்கள் குழுமினார்கள்.
எதற்கு வாரியம் வாங்குவதற்காகவா? இலட்சக்கணக்கில் பணத்தை வாரிச் சுருட்டவா? இல்லை, தமுமுக மறந்துவிட்ட இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடந்த இந்தப் பேரணியில் கடலாய்ப் பெருக்கடுத்தனர்.
முதலில் ஒரு கட்சியில் கள்ளக் காதல் வைத்துக் கொண்டு குடந்தை பேரணியைக் கூட்டவில்லை.

கையிலே காசு வாயிலே தோசை

இன்றைய ஆளும் திமுக, அன்றைய ஆளும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளில் இடஒதுக்கீட்டை அறிவிக்கிறார்களோ அவர்களுக்குத் தான் எங்கள் ஆதரவு என்று இரு கட்சிகளையும் சம தூரத்தில் வைத்திருந்தோம்.
அதிமுக முதலில் பதிலளித்தது. ஆந்திர மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை நீதிமன்றம் நிறுத்தி வைத்த கசப்பான அனுபவத்தையெல்லாம் கருத்தில் கொண்டு, இடஒதுக்கீடு கோரிக்கையைப் பரிசீலிப்பதற்கான ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் நீதிமன்றம் தலையிடாது. மேலும் இந்த ஆணையம் பரிந்துரைத்தால் அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இட ஒதுக்கீடு அளித்தே தீரவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். எனவே இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கருதப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். கும்பகோணம் பேரணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக இது அமைந்தது.
இதன் அடிப்படையில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்காக உழைத்தோம். தேர்தலில் அதிமுக தோற்றாலும், திமுகவுக்குப் பெரும்பான்மை பலமில்லாத வெற்றி கிடைத்தது.
திமுகவின் கோட்டை என்று கருதப்பட்ட சென்னையை தனது பிரச்சாரத்தின் மூலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தகர்த்தெறிந்தது. முஸ்லிம்களின் வாக்கு அதிகம் உள்ள பகுதிகளில் போட்டியிட்ட கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் ஆகியோர் கூட இழுபறி வெற்றியைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இப்படி ஒரு தொங்கல் வெற்றி கிடைப்பதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் வலிமையான பிரச்சாரம் தான் காரணம் என்பதை திமுகவே உணர்ந்தது.

திமுக ஆட்சியும் இட ஒதுக்கீடும்

ஆட்சிக்கு வந்தாலும் இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்தோம். தானைத் தலைவர் கருணாநிதியும் ஆணையத்தைத் தான் அறிவித்தார். அன்றைய முதல்வர் ஜெயலலிதா இந்தப் பணியைச் செய்த போது, வெற்றுப் பேப்பர் என்று கேலியும் கிண்டலும் செய்த தமுமுக, இப்போது அதை வரவேற்றது.
மேற்படி ஆணையத்தில் ஜெயலலிதா ஒரு முஸ்லிம் நீதிபதியை நியமித்திருந்தார். ஆனால் கருணாநிதி அறிவித்த ஆணையத்தில் முஸ்லிம்கள் யாரும் இடம்பெறவில்லை.
மேலும் இந்த ஆணையம் தனது அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான காலக் கெடுவை ஓராண்டு என்று நிர்ணயித்திருந்தார். ஆனால் கருணாநிதி ஆணையத்தின் காலக் கெடுவை இரண்டு ஆண்டுகளாக மாற்றினார். இதை எதிர்த்து களத்தில் குதித்தது தவ்ஹீத் ஜமாஅத் தான்.
கருணாநிதியின் இந்தக் காலம் தாழ்த்தும் முயற்சியைக் கண்டித்து தமிழகமெங்கும் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பெரும் மக்கள் கூட்டம் திரண்டது.
இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக ஆணையத்தின் அறிக்கை தாக்கல் பணி நடைபெற்றது. அதில் கூறப்பட்ட பரிந்துரையின் படி இடஒதுக்கீடு அறிவிக்கப்படும் என்று காத்திருந்தோம். கண்கள் பூத்துப் போகும் வரை காத்திருந்தோம்.
கருணாநிதி காக்க வைத்து கழுத்தறுப்பதில் வல்லவர். அதனால் இவரிடம் அமைதி காத்தால், இஸ்லாமியர்களுக்கு இதயத்தில் இடஒதுக்கீடு எப்போதும் உண்டு என்று வசனம் பேசியே ஆட்சிக் காலத்தைக் கடத்தி விடுவார். அதனால் இவரிடம் போராடித்தான் பெற வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதன்படி 2007 ஜனவரி 29 அன்று குடந்தைப் பேரணியை நினைவூட்டும் விதமாக, தமிழகமெங்கும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினோம்.
 அந்தப் போராட்டத்திலேயே அடுத்தக் கட்டமாக சிறை நிரப்பும் போராட்டம் என்று அறிவித்தோம். அதன் பிறகும் இடஒதுக்கீடு என்பது கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது.

சிறை நிரப்பும் போராட்டம்

மூச்சும் இல்லாமல், பேச்சும் இல்லாமல் கிடந்த இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு உயிர் கொடுக்கும் விதமாக, வாழ்வுரிமை மாநாடு நடைபெற்ற தினமான ஜூலை 4ம் தேதியைத் தேர்ந்தெடுத்து அன்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினோம். ஆண்களும் பெண்களும் வந்து குவிந்தனர். தாங்கள் பெற்ற பச்சிளம் குழந்தைகளுடன் வந்து குவிந்தனர்.
காவல்துறை வேனில் தொட்டில் கட்டித் தங்கள் குழந்தைகளைத் தூங்க வைத்த வரலாறு தமிழகத்தில் இதுவரை எந்தவொரு இயக்கமோ கழகமோ கண்டதில்லை. இனி காணப் போவதும் இல்லை. சுதந்திர இந்தியாவில் இப்படியொரு சிறை நிரப்பும் போராட்டத்தை எந் அரசியல் கட்சியும் நடத்தியதில்லை என்று உளவுத் துறையினர் வியக்கும் அளவுக்கு மக்கள் சிறை செல்லத் துணிந்தனர்.

டெல்லி சுற்றுலா

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதே வீரியத்துடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் திமுகவின் சிறுபான்மைப் பிரிவாக மாறிவிட்ட தமுமுக, திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் விழித்துக் கொண்டிருந்தது.
திமுக ஆட்சியை எதிர்த்துப் போராட்டம் நடத்தினால் வாரியப் பதவிகள் வாய்க்காமல் போய்விடும். ஆளும் கட்சியின் கூட்டணி என்ற பெயரில் நடத்தும் அடாவடிகளுக்கு ஆப்பு வந்துவிடும் என்று பயந்த தமுமுக, தனது சுய லாபங்களுக்காக சமுதாயத்திற்குக் குழிபறிக்கும் காரியங்களில் இறங்கியது.
இடஒதுக்கீடு அளிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத் தான் உண்டு. மாநில அரசுகளுக்கு அதிகாரமே இல்லை என்று மனசாட்சியை விற்று மடமை வாதம் பேசியது தமுமுக.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் படிப்பறிவில்லாமல் மாநில அரசிடம் போய் இடஒதுக்கீடு கேட்கிறார்கள் என்ற நம்மைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தது. கருணாநிதி அரசைக் காப்பாற்றுவதற்காக, நாங்கள் டெல்லியில் போய் இட ஒதுக்கீடு கேட்கப் போகிறோம் என்று மாய்மாலம் செய்தது தமுமுக.
ஊரான் வீட்டுப் பணத்தில் டெல்லிக்கு உல்லாசப் பயணம் சென்றது. டெல்லி சுற்றுலா சென்று மத்திய அரசை ஏதாவது அறிவிக்கச் செய்ததா? என்றால் ஒன்றுமில்லை. அழைத்த பிரமுகர்கள் கூட கல்தா கொடுத்தார்கள். ஒரு குட்டி அணி வகுப்பை நடத்தி விட்டுடெல்லியில் பேரணி நடத்தியதாக பீற்றிக் கொண்டது.
ஏற்கனவே உள்ள சமுதாய இயக்கங்கள் ஆளுங்கட்சியிடம் ஒரு சில சீட்டுக்களை வாங்கி விட்டு, தன்மானத்தை இழந்து பிணமானார்கள் அல்லவா? அது போன்று இவர்களும் வாரியத்தை வாங்கி விட்டு வாய் பொத்திக் கிடக்கின்றார்கள். இவர்கள் வாய் பொத்திக் கிடந்தால் கூடப் பரவாயில்லை. வாரியப் பதவியைப் பெறுவதற்காக சமுதாயத்தின் வாழ்வாதாரக் கோரிக்கையான இடஒதுக்கீட்டையே பலி கொடுக்கத் துணிந்து விட்டார்கள்.

தொடரும் இன்ஷா அல்லாஹ் 

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons