Monday, November 7, 2011

எதற்கெடுத்தாலும் முஸ்லிம்கள் மீது பலி போடும் கையாலாகாத காவல்துறையும் மீடியாவும் – பிரஸ் கவுன்சில் தலைவர் உச்ச நீதிமன்ற முன்னால் நீதிபதி கட்ஜு கடும் கண்டனம்


“நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் போக்கை காவல்துறையும் ஊடகங்களும் கையாள்வது வெட்கக்கேடானது” என்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவருமான மார்க்கண்டே கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்தார். 

ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “முஸ்லீம்களை குண்டுவெடிப்புகளுக்குக் காரணகர்த்தாவாக சித்தரிக்கும் ஊடகங்களும் காவல்துறையும் அப்போக்கை கைவிட வேண்டும்” என்று கூறினார். தடய அறிவியல் உள்ளிட்ட விஞ்ஞான முறைகளில் நமது நாட்டின் காவல்துறைக்குத் திறமை இல்லாததாலேயே தீவிரவாத வழக்குகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக கூறினார்.

குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே மின்னஞ்சல்கள் அல்லது அலைபேசிகளில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் மூலம் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் குறித்து முடிவுக்கு வருவதை வண்மையாக கண்டித்தார். “உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் கையில் கிடைக்கும் முஸ்லீம்களின் மீது காவல்துறை பொய் வழக்கு போடுகிறது” என்றார்.

“அது போல் எவ்வித ஆதாரமும் இல்லாமல் பரபரப்புக்காக பொய் செய்தி வெளியிடும் ஊடகங்கள் கலந்துரையாடல்கள் போன்ற ஜனநாயக வழிமுறைகளின் மூலமாகவோ அல்லது அபாராதம் மூலமாகவோ, அரசின் விளம்பரங்களைக் கொடுக்காமல் தடுப்பதன் மூலமாகவோ தேவைப்பட்டால் ஊடக உரிமங்களை ரத்து செய்வதன் மூலமாகவோ திருத்தப்பட வேண்டும்” என்றும் மார்க்கண்டே கட்ஜ் குறிப்பிட்டார்.

கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் பெங்களூரு, வாரணாசி, புனே, மும்பை மற்றும் டெல்லி என பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளின் குற்றவாளிகள் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

-தமிழ் செய்தி இணையதளம்

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons