தவ்ஹீத் ஜமாஅத் வளர்ச்சிக்குக் காரணம் என்ன?
அபூ சாலிஹ் மேலப்பாளையம்
அல்லாஹ்வின் அருள் தவிர வேறு இதற்கு வேறு ஒரு காரணமும் இல்லை. நாட்டில் இருக்கின்ற இயக்கங்களில் தவ்ஹீத் ஜமாஅத் தான் குறைந்த அளவு தவறுகளைக் கொண்டதாகவும் அதிகமான நன்மைகளைக் கொண்டதாகவும் இருப்பதால் அல்லாஹ்வின் மகத்தான உதவிகள் கிடைத்து வருகின்றன. இது குறித்து ஜூலை 4 மாநாட்டுக்குப் பின்னர் நாம் உணர்வில் எழுதியதை இந்த இடத்தில் எடுத்துக் காட்டுகிறோம். அதுவே உங்கள் கேள்விக்கு தக்க பதிலாக அமையும்
உணர்வில் எழுதியது இது தான்:
எல்லாப் புகழும் இறைவனுக்கே
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய முஸ்லிம்களுக்கான உரிமை மாநாடும் பேரணியும் தமிழக வரலாறு காணாத அளவிலும், ஒட்டு மொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்ட கழிசடைகள் தவிர மற்ற இயக்கத்தினர் இந்த மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளதை ஒப்புக் கொள்கின்றனர்.
இந்த மகத்தான வெற்றிக்கு என்ன காரணம்? இதை மற்றவர்கள் சிந்திக்க மறுத்தாலும் தவ்ஹீத் சகோதரர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
திருக்குர்ஆனும் நபிவழியும் மட்டுமே மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் என்ற கொள்கைக்காகவும்
தீமைக்கும் தீயவர்களுக்கும் எதிராக நமது ஜமாஅத்தின் உறுதியான நிலைபாட்டுக்காகவும்
சுய ஆதாயத்துக்கு ஜமாஅத்தைப் பயன்படுத்தாமல் மக்களுக்குச் சேவை செய்வதை மட்டுமே கொள்கையாகக் கொண்டதற்காகவும்
அல்லாஹ்வின் அளப்பரிய அருள் இந்த ஜமாஅத்தின் மீது இருந்ததே இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம்.
இந்த ஜமாஅத்தின் கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் ஒவ்வொரு பிரச்சனயின் போதும் மனிதர்களின் கணிப்பைப் பொய்யாக்கி அல்லாஹ் மகத்தான அருள் புரிந்திருப்பதை நாம் காண முடியும்.
(தவ்ஹீத் ஜமாஅத் என்று நாம் குறிப்பிடுவது பெயரைப் பற்றி அல்ல. மேலே நாம் எடுத்துக் காட்டிய கொள்கையில் இருந்தவர்களையே தவ்ஹீத் ஜமாஅத் என்று குறிப்பிடுகிறோம்)
நாம் மேற்கண்ட கொள்கையிலும் நிலைபாட்டிலும் உறுதி கொண்டு பிரச்சாரத்தை மேற்கொண்ட போது அந்நஜாத் என்ற மாத இதழை உருவாக்கினோம். அது மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தப் பத்திரிகையின் காரணமாக நம்மை நஜாத்காரர்கள் என்று சொல்லும் அளவுக்கு அது மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பதிப்பாளராக நியமிக்கப்பட்ட அபூ அப்துல்லா என்பவர் அதை தனது சொந்தப் பத்திரிகையாகப் பதிவு செய்து கொண்டது தெரிய வந்ததால் அந்த அநியாயத்தைக் கண்டித்து அதில் இருந்து நாம் வெளியேறினோம்.
தம்மிடம் பத்திரிகை இருப்பதால் அதன் மூலம் தவ்ஹீத் சகோதரர்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அபூ அப்துல்லாவுடன் இருந்தவர்கள் கணக்குக் போட்டனர்.
பத்திரிகை பலம் இல்லாமல் நம் நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி உண்மையைப் புரிய வைக்க எந்த வழியும் இல்லாமல் நிராயுதபாணிகளாகக் களத்தில் நின்றோம். அந்தப் பத்திரிகை மூலம் நம் மீது தொடர்ந்து சேறு வாரி இறைத்தும் கூட அல்லாஹ்வின் உதவி கொள்கைச் சகோதரர்கள் பக்கமே இருந்தது. தங்களிடம் இருந்த பண பலத்தாலும் பத்திரிகை பலத்தாலும் அவர்கள் மக்கள் மத்தியில் எடுபட முடியவில்லை. இருந்த இடம் தெரியாமல் அல்லாஹ் அவர்களைத் துடைத்தெறிந்து விட்டான்.
இதன் பின்னர் அல்ஜன்னத் என்ற பத்திரிகையை ஆரம்பித்தோம். ஜம்மிய்யது அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் இயக்கத்தை ஆரம்பித்து அதன் மூலம் பிரச்சாரத்தைத் துவக்கினோம்.
இந்தப் பத்திரிகையும் இந்த இயக்கமும் மாபெரும் வளர்ச்சி அடைந்தது. பல்வேறு ஊர்களில் மர்கஸ்கள் அமைந்தன. அனாதை நிலையங்கள், மாதரஸாக்கள் உருவாயின. நாகூர், கோட்டார், மதுரை, விழுப்புரம், பரங்கிப்பேட்டை ஆகிய நகரங்களில் மாபெரும் மாநாடுகள் நடத்தப்பட்டன. பல்வேறு ஊர்களில் தவ்ஹீத் சகோதரர்கள் தாக்கப்பட்டாலும் ஜாக் இயக்கம் அபூ அப்துல்லாவைப் பின்னுக்குத் தள்ளி விட்டு மாபெரும் வளர்ச்சியை நோக்கிப் பயணித்தது.
மக்களிடம் பிரபலமாகி விட்ட ஒரு பத்திரிகையை வைத்திருந்து அதை இழந்து நிற்பவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்பது மனிதர்களின் கணிப்பு. அதைப் பொய்யாக்கி அல்லாஹ் ஜாக் இயக்கத்துக்கு வெற்றியைத் தந்தான்.
ஜாக் இயக்கத்தின் தலைவராக இருந்த பீஜே, பிரச்சாரம் செய்ய அந்தப் பொறுப்பு தடங்கலை ஏற்படுத்துகிறது என்பதால் அந்தப் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டு கமாலுத்தீன் மதனியைத் தலைவராக்கினார்.
ஆரம்பத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த ஜாக் தலைமை அபாரமான வளர்ச்சி கண்ட பின் நிறைய சமரசங்களைச் செய்து கொண்டது.
பாலியல் மற்றும் பண மோசடியில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பீஜே ஆதாரத்துடன் கூறிய போது அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
நிர்வாகக் குழுவில் கணக்கு வைக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
பணக்காரர்களின் ஆடம்பரத் திருமணங்களில் கலந்து கொள்ளும் அளவுக்கு கொள்கை நீர்த்துப் போனது. இந்த நிலையை மாற்ற உள்ளிருந்து நடத்திய போராட்டம் தோல்வியில் முடிந்தது.
இனியும் இந்தக் கொள்கையற்றவர்களுடன் இருக்க முடியாது என்பதால் அதில் இருந்தும் வெளியேறினோம்.
எல்லா மர்கஸ்களும் ஜாக் வசம் இருந்தன. அல்ஜன்னத் ரிகையும் அவர்களிடம் இருந்தது.
கொள்கைக்காக வெளியேறியவர்களிடம் கொள்கை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.
கூடிப் பேசுவதற்கு ஒரு ஆபீஸ் கூட இல்லை.
ஆனாலும் ஜாக் இயக்கத்தினருக்கு அல்லாஹ்வின் அருள் கிட்டவில்லை. கொள்கைவாதிகளுக்கே அல்லாஹ் வெற்றியைத் தந்தான். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு என்ற பெயரில் கொள்கையில் சமரசம் இல்லாமல் உறுதியாக நம் பயணத்தைத் தொடர்ந்தோம்.
இந்தக் காலகட்டத்தில் தான் மக்களின் உரிமைக்காக போராட தமுமுகவை ஆரம்பித்தோம். இதில் பலர் முன்னிலைப்படுத்தப்பட்டாலும் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு எனும் மக்கள் சக்தியே இதன் அடித்தளமாக அமைந்தது. அதன் இப்போதைய தலைவர்கள் யாரும் சமுதாயத்தால் அறியப்பட்டவர்களாகக் கூட இருக்கவில்லை. சிறைச்சாலைகள் அடக்குமுறைகளுக்கு ஆளான போது தவ்ஹீத் சகோதரர்கள் தான் ஆளானார்கள். பொருளுதவி செய்தவர்களும் அவர்கள் தான். ஊர் ஊராகச் சென்று தமுமுகவுக்கு அறிமுகத்தை ஏற்படுத்தியதும் தவ்ஹீத் பிரச்சாரகர்கள் தான்.
தவ்ஹீத்வாதிகளின் உழைப்பால் இயக்கம் வளர்ந்த பின் பீஜே இனி நான் பொறுப்பில் இருக்க அவசியம் இல்லை. இயக்கம் வளர வேண்டிய அளவுக்கு வளர்ந்து விட்டது எனக் கூறி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். அப்போது அமைப்பாளர் பொறுப்பு தான் முதல் நிலை பொறுப்பாகும்.
தமுமுக வளர்ந்த பின் அதில் ஏறி சவாரி செய்வதற்காக சுயநலவாதிகளும் கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகளும் நுழைந்து கொண்டனர். அரசியல் ஆசை ஊட்டினார்கள். இதற்கு பிஜேயும் தவ்ஹீத் பிரச்சாரகர்களும் முட்டுக்கட்டையாக உள்ளனர் என்று சதி ஆலோசனை செய்தனர்.
முடிவில் நாங்கள் அனைத்து மக்களின் ஆதரவைப் பெறப்போகிறோம். எனவே நீங்கள் தவ்ஹீத் பிரச்சாரம் செய்யக் கூடாது நேருக்கு நேராகவே தெரிவித்தனர். இவர்களின் பதவி ஆசை கண்ணை மறைக்கிறது. அல்லாஹ்வை மறந்து இவர்கள் கணக்குப் போடுகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு தமுமுகவில் இருந்து தவ்ஹீத் பிரச்சாரகர்கள் அனைவரும் கொள்கைக்காக வெளியோறினோம்.
தமுமுக என்ற பெயர் அவர்களிடம் இருந்தது. அதன் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கள் அவர்களிடம் இருந்தன. அனைத்து கிளைகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால் நாம் வெறுங்கையுடன் வெளியேறினோம்.
தவ்ஹீத் சகோதரர்கள் வெளியேறிய பின் தவ்ஹீதை எதிர்க்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக தமுமுகவில் சேர்வார்கள் என்றும் தவ்ஹீத்வாதிகள் அடையாளம் தெரியாமல் போவார்கள் என்றும் தமுமுகவினர் கணக்குக் போட்டனர். மேலும் தவ்ஹீத் பிரச்சாரகர்களுக்கு எதிராக மொட்டைப் பிரசுரம், கள்ள வெப்சைட்டுகள், கள்ள முகவரியில் இருந்து அவதூறூகள் என்று தங்களின் அனைத்து சக்தியையும் நிராயுதபாணிகளான நமக்கு எதிராகப் பயன்படுத்தினார்கள். ஆளும் கடசியுடன் கூட்டணி ஏற்பட்ட பின் அந்த உறவையும் நமக்கு எதிராகப் பயன்படுத்தினார்கள். நம்முடைய பிரச்சாரக் கூட்டங்களுக்கு சுன்னத் ஜமாஅத்துடன் சேர்ந்து கொண்டு இடையூறுகளை ஏற்படுத்தினார்கள்.
ஆனால் ஆயுதம் இல்லாமல் களத்தில் நின்ற தவ்ஹீத் சகோதர்களுக்குத் தான் அல்லாஹ்வின் உதவி கிடைத்தது.
ஜீரோவில் இருந்து 2004ல் பயணம் தொடங்கியது. கொள்கைக்கு ஒரு இயக்கம், சமுதாயப் பிரச்சனைக்கு ஒரு இயக்கம் என்ற நிலை இனி வேண்டாம். இரண்டு பணிகளையும் ஒரே இயக்கத்தின் மூலமே செய்வோம் என்ற முடிவுக்கு வந்து கும்பகோனத்தில் பத்து லட்சம் மக்கள் கொண்ட மாநாட்டை நடத்தினோம்.
தவ்ஹீத் என்று நம்மைக் காட்டிக் கொண்டால் மக்கள் வர மாட்டார்கள் என்று தமுமுக கூறிய காரணத்தை அல்லாஹ் பொய்யாக்கினான். தொடர்ந்து எடுத்த காரியம் அனைத்திலும் அல்லாஹ் வெற்றியை அளித்து வருகிறான்.
தவ்ஹீத் சகோதரர்கள் பிரிந்த பின் தமுமுக ஒரு மாநில மாநாட்டையும் நடத்தவில்லை.
ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் ஆறு வருடங்களில் மூன்று மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
இரு நூறுக்கும் மேற்பட்ட ஊர்களில் சொந்தமான இடத்தில் அலுவலகம்
அனாதை இல்லம்
முதியோர் இல்லம்
இஸ்லாத்தில் இணையும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பயிற்சி மையங்கள்
ஆண்களும் பெண்களும் மார்க்க அறிஞராக தனித்தனிக் கல்விக் கூடங்கள்
சொந்த இடத்தில் பல பள்ளிக் கூடங்கள்
என ஆறே ஆண்டுகளில் இந்த ஜமாஅத்துக்கு அல்லாஹ் செய்த அருள் எண்ணிப்பார்க்க முடியாததாகும்.
இதற்குக் காரணம் முன்னர் நாம் சொன்ன கொள்கையும் அதில் சமரசம் செய்து கொள்ளாத உறுதியும் தான்.
மனிதக் கணக்குப்படி தவ்ஹீத் ஜமாஅத் அழிந்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு அனைத்தையும் விட்டு விட்டு தவ்ஹீத் ஜமாஅத் வெளியேறியது. தமுமுக தனது ஆதரவுத் தளத்தைப் பெருக்கிக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் அனைத்து வசதிகளையும் அது தன் வசம் வைத்துக் கொண்டிருந்த்து
ஆனால் அப்படி நடக்கவில்லை. ம்மக என்ற கட்சியை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு சுன்னத் ஜமாஅத்தினரும் இவர்களை ஆதரிக்கத் தயாராக இல்லை என்பதை இவர்களே நிரூபித்துக் காட்டி விட்டனர்.
கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து சுய நலன் இல்லாமல் செயல்படுவோருக்கு அல்லாஹ் மகத்தான உதவியைத் தருவான் என்பதன் மற்றொரு எடுத்துக் காட்டு தான் இந்த மாநாட்டின் மாபெரும் வெற்றி.
இந்த மாநாட்டைப் பொருத்தவரை அனைத்து சகோதரர்களும் நிதி உதவி செய்தார்கள் என்றாலும் மக்களால் அறியப்பட்ட முஸ்லிம் கோடீஸ்வரர்கள், தொழில் அதிபர்கள், கல்விக்கூடங்கள் நடத்துவோர் என யாரும் உதவவில்லை. தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேராத செல்வந்தர்களில் ஒரே ஒரு சகோதரர் தானாக முன் வந்து அளித்த ஐம்பதினாயிரம் தான் தாயகத்தில் கிடைத்த பெரிய தொகை எனலாம். சாமான்ய சாதாரண மக்களும் பாலைவனத்தில் பரிதவிக்கும் எழை உழைப்பாளிகளும் அளித்த சிறு சிறு தொகை மூலம் தான் இந்த மாநாடு இவ்வளவு சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
தஞ்சை வல்லத்தில் மாநாடு நடத்தப்பட்ட போது திறமை மிக்க பலர் நம்மோடு இருந்தனர். என்ன காரணத்தாலோ அல்லாஹ்வின் உதவி இல்லாமல் போய் மாநாட்டுக்கு வந்த அனைவரும் அதிருப்தியோடும் கடும் கோபத்துடனும் சென்றார்கள். அந்த அளவுக்கு மக்கள் கஷ்டப்பட்டார்கள். மாநாடு முடிந்த இரவு நடந்த நிர்வாகக் கூட்டத்தில் நமக்குத் தகுதி இல்லை. நாம் அனைவரும் ராஜினாமாச் செய்ய வேண்டும் என்று பீஜே வலியுறுத்தினார். அந்த அளவுக்குக் குறைபாடுகள் இருந்தன.
ஆனால் அனுபவம் குறைவான மக்கள் இந்த மாநாட்டுக்குப் பொறுப்பு ஏற்று நடத்திய போதும் யாரும் எந்தக் குறையும் சொல்லாமல் சிறப்பாக நடந்துள்ளது என்றால் அது அல்லாஹ்வின் பேரருளால் தான்.
ஏற்கனவே தஞ்சை மாநாட்டைச் சரியாக நடத்தவில்லை என்று கெட்ட பெயர் வாங்கியிருந்தும் மக்கள் நம்மை நம்பினார்கள் என்றால் நமது நல்ல எண்ணத்துக்காக அல்லாஹ் செய்த அருள் தான்.
அனைவருடனும் சமரசம் செய்து கொண்டு தீமையைத் தடுக்காமல் இருந்தால் தான் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று மக்கள் கருதிக் கொண்டு நிலையில் தயவு தாட்சயமில்லாத தனது போக்கால் அனைது இயக்கங்களின் வெறுப்பைச் சம்பாதித்துள்ள தவ்ஹீத் ஜமாஅத்தின் அழைப்புக்கு மக்கள் செவி சாய்க்கிறார்கள் என்றால் இது அல்லாஹ் செய்து காட்டிய அற்புதம் இல்லாமல் வேறு என்ன?
தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவராக இருந்து கொண்டு அதன் கொள்கைக்கு எதிராக ரகசிய செயல் திட்டத்தில் ஈடுபட்டு அதற்காகக் கைது செய்யப்பட்டு ஜமாஅத்துக்கு ஹாமித் பக்ரி துரோகம் செய்தார். தலை சிறந்த பேச்சாளராக இருந்ததால் அவரால் ஜமாஅத் நலிவடையும் என்று பலரும் எதிர்பார்த்தனர். புதிதாக ஒருவர் கிளம்பும் போது என்ன சொல்கிறார் என்று பார்ப்பதற்காக மக்கள் கூடுவார்கள். அப்படி ஹாமித் பக்ரிக்கும் கூடினார்கள். ஆனால் அது நீடிக்கவில்லை. ஒரு சகோதரன் கூட அவரை நம்பவில்லை. இந்த வாரம் அவர் தனது தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்ததற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டு விட்டு சுன்னத் ஜமாஅத்தில் சேர்ந்து விட்டார்.
பாலியல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுக்காக பாக்கரும் அவருக்குத் துணை நின்றவர்களும் நீக்கப்பட்டனர். அவர்கள் இல்லாமல் மாநாடு நடத்த முடியுமா? என்று சிலர் நினைத்தனர். மேலும் பத்திரிகை தொடர்பை கையில் வைத்திருந்த ஜாம்பவான்களும்(?) இல்லாமல் நடத்தப்படும் இந்த மாநாடு பிசுபிசுத்து விடும் என்று கணக்குப் போட்டனர்.
ஆனால் தவறு செய்தவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அவர்களைத் தூக்கி எறிந்தது அனைவர் மத்தியிலும் நற்பெயரை அதிகமாக்கியது.
தஞ்சை மாநாட்டின் போது நம்மோடு பத்திரிக்கையாளர்களுடன் தொடர்புடையவர்கள் இருந்தனர். அவர்கள் நம்மோடு இருந்தும் தஞ்சை மாநாடு பற்றி ஸ்டாம்ப் ஸைஸ் செய்தி கூட வர வைக்க முடியவில்லை. டீவிக்களிலும் வரவில்லை. ஆனால் மாணவர்கள் அணி பொறுப்பாளர்களிடம் பத்திரிகை தொடர்பு பொறுப்பு கொடுக்கப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மீடியாக்களிலும் பிரதமரின் கவனத்துக்குச் செல்லும் அளவுக்கும் அவர்கள் மூலம் அல்லாஹ் இந்த சாதனையை நிகழ்த்தினான்.
நாம் கொள்கையில் உறுதியாகவும், சுயநலன் இல்லாமலும். ஆளுக்குத் தக்கவாறு வளைந்து கொடுக்காமலும் நம் பயணத்தைத் தொடரும் வரை அல்லாஹ்வின் உதவி நம் மீது இருந்து கொண்டே இருக்கும்.
தவ்ஹீத் ஜமாஅத் கடந்து வந்த பாதையை ஒருவர் திரும்பிப் பார்த்தால் இதோடு இவர்கள் அழிந்தார்கள் என்று எதிரிகள் ஆனந்தத் தாண்டவமாடும் அளவுக்கு இருந்தது. ஒவ்வொரு பிரிவுக்குப் பிறகும் அனைத்தையும் இழந்து விட்டு வந்த பின்பும் தமிழக முஸ்லிம் இயக்கங்களில் முதல் இயக்கமாக இந்த ஜமாஅத் திகழ்ந்து வருவது நம்ப முடியாத அதிசயமாகவே உள்ளது.
கொண்ட கொள்கையில் உறுதி, இந்த ஜமாஅத்தின் மூலம் எந்தப் பயனையும் அடையாத தலைமை எந்த நிலையிலும் நிலை மாறாத தன்மை காரணமாகத் தான் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அல்லாஹ் அருள் புரிந்து வருகிறான். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே
இந்தக் கூட்டத்தைக் கண்ட பின் இதை தங்கள் சுயநலனுக்கு பயன் படுத்த தவ்ஹீத் ஜமாஅத் எண்ணினால் கொள்கையில் வளைந்து கொடுக்க முயன்றால் மற்றவர்கள் அடைந்த கதியைத் தான் இந்த ஜமாஅத்தும் அடையும். இதை உணர்ந்து மேலும் தூய்மையாக நடக்கும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கிட அவனிடமே இறைஞ்சுகிறோம்.
09.09.2011. 05:19
0 comments:
Post a Comment