Thursday, September 8, 2011

பெரியார்தாசனின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்!



 கட்சி மாறுவது இல்லை... திராவிட இயக்கத்தில் இருக்கிறேன்!''





பேச்சு கேசட்டுகளில் பெரியார் தாசன் கேசட் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரசித்தம். இரண்டு மணிநேரம் பேசிவிட்டு அரைமணி நேரம் இன்டர்வெல் விட்டுவிட்டு மீண்டும் இரண்டு மணிநேரம் பேசுவார். அப்படிப்பட்ட பேராசிரியர்பெரியார்தாசன், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் 'தாயகம்’ வளாகத்துக்கு வந்து தன்னை ம.தி.மு.க-வில் இணைத்துக் கொண்டுவிட்டார்! 
பரவசத்தில் இருந்த வைகோ, ''எனக்கு அதிக மகிழ்ச்சியாக இருந்தால் சரியாகப் பேச வராது. மூன்று நாட்களாக நான் அதிகமாகவே மகிழ்ச்சியாக இருக்கிறேன். திராவிட இயக்கத்தின் கருத்துக் களஞ்சியமாக இருக்கும் பேராசிரியர் வந்திருப்பது, நமக்கு 1,000 யானை பலம் கிடைத்ததைப்போல. இங்கே அவர் பேசியது ட்ரெய்லர்தான். மீதியை நெல்லைமாநாட்டில் கேட்கலாம்...'' என்று சுருக்கமாக முடித்ததும் கைதட்டல்களால் அதிர்ந்தது தாயகம்.
முன்னதாக தனது ஏற்புரையில், நையாண்டிகளுக்கு இடையில் பெரியார்தாசன் பேசப் பேச, சிரிப்பும் கைதட்டல்களுமாக அரங்கம் அமர்க்களப்பட்டது. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

''திடீரென ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்தது ஏன்?''

''கட்சி அரசியலில் இதுவரை நான் பார்வையாளனாகத்தான் இருந்தேன். நீண்டகாலமாக தி.மு.க-வின் அனுதாபி. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் விவகாரத்தில்... தூக்குப் போடப் போறான், பயிற்சி நடக்குது, இப்படித்தான் தூக்கு போடப் போறான்னு ஒரு பக்கம் செய்திகள்... '9-ம் தேதி தூக்கு, அதுக்கு யார் யாரை நியமிச்சு இருக்காங்க?’னு செய்திகள் வந்தபோது, பதைபதைப்பு. அந்த இறுக்கத்தைத் தளர்த்தினது, சட்டரீதியான முயற்சிகள்தான். வாழ்நாள் முழுதும் போராளியா இருந்த பாபா சாகேப் அம்பேத்கர், 'சட்டரீதியாக முறையாக செயல்பட்டால்தான் உரிமைகளை வென்றெடுக்க முடியும்’னு சொல்வார். சரியான அரசியல் நகர்வு இதுதான்னு நினைக்கிறேன். நீண்டகாலநாடாளுமன்றவாதியான வைகோ இதைச் சாதிச்சுக் காட்டியிருக்கார். இதுதான் என்னை ம.தி.மு.க-வில் கொண்டுவந்து சேர்த்தது!
தேர்தலில் தோற்றால் 'யார் வீட்ல எழவோ, பாய் போட்டுட்டாங்க’னு போவதுதான் கட்சிகளுடைய வழக்கம். அ.தி.மு.க. தோற்றுவிட்டால் ஊட்டுக்குப் போயிடுவாங்க. தி.மு.க. தோத்துட்டா, பட்டிமன்றம், கவியரங்கம் நடத்துவாங்க. எரியும் மக்கள் பிரச்னைகளைக் கையில் எடுத்து செயல்பட மாட்டாங்க. ஆனா, ம.தி.மு.க. அப்படி இல்லை. இப்போ,அவங்ககிட்ட பதவி, அதிகாரம் எதுவும் இல்லை. ஆனாலும், திராவிட இயக்கப் பார்வையோட தமிழர் நலனுக்கான இயக்கமா நிக்குது. சிலர் தமிழ்த் தேசியம்னு பேசிகிட்டு, பெரியாரையும் பெரியார் இயக்கங்களையும் தமிழர் விரோதமா சித்திரிக்கிறாங்க. அப்படி இல்லைன்னு நிரூபிக்கிற இயக்கமா ம.தி.மு.க. இருக்கு. கலைஞரைப் பொறுத்தவரை,அதிகாரம் அவர் கையில் இருக்கும்போது... இலவசம், சில வேலைவாய்ப்புகளைத் தவிர, தமிழர்களின் பாதுகாப்புக்காக எதையும் அவர் செய்தது இல்லை. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க அவர் என்ன செய்தார்? சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல் கைதிகளை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, சிறையிலேயே அடைத்துவைத்து இருந்ததை தடுத்தாரா? 12 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு, நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்ட குணங்குடி அனீபாபோன்றவர்களுக்கு என்ன நிவாரணம்? அவர்கள் இழந்த காலத்தைத் திருப்பித் தரமுடியுமா? இந்தப் பிரச்னையிலும்,வாஞ்சையுடன் வைகோ குரல் கொடுக்கிறார். எனவேதான் ம.தி.மு.க.வில் இணைந்தேன்.''

''முதலில் தி.க-வில் இருந்தீர்கள். பிறகு புத்த மதம், பிறகு இஸ்லாமிய மதம்... என மாறிக்கொண்டே இருக்கிறீர்கள் என்று உங்களை விமர்சிக்கிறார்களே?''

''கருத்தாக்கங்களை மாற்றிக்கொள்வது தவறு இல்லை. காங்கிரஸை அழிக்கணும்னு சொன்ன பெரியார்தான்,காந்திதேசம்னு பேரு வைக்கச் சொன்னார். 1,300 குறட்பாக்களில் இருக்கிற கருத்துகள்தான், 52 திரிபீடகங்களில் சொல்லப்பட்டு இருக்குதுனு பௌத்தத்துக்குப் போனேன். பிறகு, இறைவன் இருக்கிறானா, இல்லையானும் யோசிச்சப்ப,இறைவனே அருளியது குர்-ஆன், மனிதனின் வார்த்தைகள் இல்லைன்னு உணர்ந்தேன். இது என் சமயக் கருத்துகள்.அரசியலைப் பொறுத்தவரை நான் திராவிட இயக்கத்தில்தானே இருக்கிறேன், கட்சி மாறுவது என்கிற பேச்சுக்கே இடம் இல்லை.'' 

''இன்னமும் மெட்ராஸ் பாஷையிலேயே மேடைகளில் பேசுகிறீர்களே?''

''நான் அடிக்கடி சொல்றதுண்டு... தஞ்சாவூரில் வாசல் வரை காவிரி வந்து பயிர் வைக்கச் சொல்லும். எங்க வட ஆற்காடு பகுதியில 600 அடி தோண்டினாத்தான் தண்ணி வரும். ஊருக்கு ஊர் வித்தியாசம் இருக்கு! உழைச்சுக் களைச்சுக் கிடக்கிறவன்ட்ட 'மண்வெட்டி இருக்கிறதா? பேருந்து போய்விட்டதா?’னு கேட்டா, மம்பட்டி கீது, பஸ் பூடுச்சுனுதான் சொல்வான். இது ஒன்றும் கேவலம் இல்லை. சிந்திச்சுப் பேசுறதுதான் நாகரிகம்னு இல்லை. உழைத்துக் களைத்த மக்களின் அடி உள்ளத்தில் இருந்து உணர்ச்சி வேகத்தோடு வருவது, வட ஆற்காடு வட்டார மொழி வழக்கு. இதுதான் என்னுடைய பாணி. எவ்வளவு உயர்வான கருத்தைச் சொன்னாலும், எங்கும் எப்போதும் எனக்கு இந்தத் தமிழ்தான் வசப்படுகிறது. எதுவாக இருந்தாலும் தமிழ் தமிழ்தானே!''
                                                                       
                                                                                                                நன்றி - இரா.தமிழ்க்கனல்

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons