Thursday, September 22, 2011

ஆயக்குடியில் அட்டூழியம் அரிவாளோடு மேடை ஏறிய பள்ளிவாசல் இமாம் போர்க்களமானது பொதுக்கூட்டம்!


இந்த தவ்ஹீத் பிரச்சாரத்தைக் கையில் எடுத்த நாள் முதல் இந்த கொள்கையைச் சொன்னவர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை. ஊருக்கு ஊர் அடி உதைகள், அரிவாள் வெட்டுகள் என அனைத்தையும் தாண்டி இன்றைக்கும் அந்தக் கொள்கையைச் சொல்வதில் யாரும் பின்வாங்கி விடவில்லை. உனக்கு பணம் வேண்டுமா? பதவி வேண்டுமா? எடுத்துக் கொள். ஆனால் இந்தக் கொள்கையை மட்டும் சொல்லாதே! என்று வந்த மிரட்டல்களையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு ஏகத்துவத்தைச் சொன்ன பிரச்சாரகர்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் இன்றைக்கும் ஓய்ந்தபாடில்லை.
அன்றைக்கு ஏகத்துவத்தை எத்தி வைத்த போது யாரெல்லாம் விரட்டினார்களோ, அடித்தார்களோ அவர்கள் தான் இன்றைக்கு கொள்கைச் சகோதரர்களாக, அதே பணியைச் செய்பவர்களாக, இவர்கள் கொடுத்த அதே அடி உதையை மற்றவர்களிடமிருந்து பெறுபவர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடியில் கடந்த 18/09/2011 ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாநிலப் பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் கலந்து கொண்டார். சரியாக மாலை 7 மணிக்கு துவங்கிய இந்தக் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள். இவர்கள் என்ன தான் சொல்கிறார்கள் என்பதைப் பார்த்து விடுவோம் என பொதுமக்கள் பலரும் அந்தப் பகுதியருகே நின்று கொண்டிருந்தனர்.
திருப்பூர் அஹமது கபீர் வரதட்சனையின் கொடுமை பற்றி விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார். பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ்வும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளும் அந்த மேடையில் அமர்ந்து இருந்தனர்.
அப்போது யாரும் எதிர்பார்த்திராத வகையில் மேடையின் பின்புறம் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய பழைய ஆயக்குடி பள்ளிவாசல் இமாம் இப்ராஹீம் என்பவரும், இக்பால் என்பவரும் தங்கள் கைகளில் பளபளப்பான பெரிய அரிவாள்களுடன் மேடையை நோக்கிப் பாய்ந்தனர் .
ஏன்டா நாய்களா! உங்களால் வரதட்சனையை ஒழிக்க முடியுமாடா? வரதட்சனை ஒழிப்பு குறித்து பேச நீங்கள் யாராடா? உங்களைக் கொல்லாமல் விட மாட்டோம் என கத்திக் கொண்டு. பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ்வை நோக்கிப் பாய்ந்தனர். உடனடியாக மேடையில் இருந்தவர்கள் திடீரென சுதாரித்து அந்த நபர்களை மடக்கிப் பிடித்தனர்.
முதலில் அவர்களிடமிருந்து அரிவாளைப் பிடிங்கி அவர்களைத் தாக்க முயன்றனர். ஆனால் அந்தச் சகோதரர்களைச் சட்டப்படி காவல் துறையில் ஒப்படையுங்கள் என ரஹ்மத்துல்லாஹ் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்களை மேடையை விட்டு கீழே இறக்கினார்கள் மேடையில் இருந்த திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள்.
“டேய் உங்களால இஸ்லாமே கெட்டுப் போச்சுடா, நாங்க என்ன சொன்னாலும் அதுக்கு ஆதாரம் இருக்கான்னு அவனவன் கேக்குறான்டா, முன்னோர்கள் சொன்னதையெல்லாம் தப்புன்னு சொல்றீங்களடா பாவிகளா” என்று சப்தமிட்ட வண்ணம் இமாம் இப்ராஹீம் ரகளை செய்ய ஆரம்பித்தார். உடனே அங்கே கூடியிருந்த ஆயக்குடி பொதுமக்கள், அங்கு வந்து அந்த இமாமிடம் ஏன் இப்படிச் செய்தாய் எனக் கேட்க, உன் வேலையை மட்டும் பார் என கத்திக் கூச்சலிட்டார் இமாம் இப்ராஹீம்.
அதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள் அவரைப் பள்ளிவாசல் இமாம் என்று கூட பாராமல் நையப் புடைத்தனர். இந்த ரகளையில் இக்பால் என்பவன் தப்பி ஓடி விட்டான்.
நீங்கள் கூட்டத்தை நடத்துங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்ததன் பேரில் பொதுக்கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இது கேள்விப்பட்டு அந்தப் பகுதிக்கு வந்த பழைய ஆயக்குடி பொதுமக்கள் எங்கள் இமாமை எங்களிடம் விட்டு விடுங்கள் எனக் கேட்க, அதன்படி இமாம் இப்ராஹீமை அவர்களிடம் ஒப்படைத்தனர் நம் நிர்வாகிகள். இறைவனின் மாபெரும் கிருபையால் வேறு எவ்வித அசம்பாவிதமும் இன்றி பொதுக்கூட்டம் நல்ல முறையில் நடந்து முடிந்தது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இமாம் இப்ராஹீம் மீதும், இக்பால் மீதும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஜாமீனில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.
அல்குர்ஆன் 61:8

1 comments:

Anonymous said...

imamukku puria vaikkalame? adavittutu case kuduthu enna aaga poguthu...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons