Saturday, February 26, 2011

கொள்கையில்லாத கொள்கை(?) வாதிகள்.


RASMIN M.I.Sc

(ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அழைப்பு மாத இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை.)

கடந்த சில தசாப்தங்களாக இலங்கையில் எங்கு பார்த்தாலும் கொள்கைச் பேசுபவர்கள் தாக்கப் பட்டார்கள்,ஊர் நீக்கம் செய்யப் பட்டார்கள்,ஊர் மக்களினால் சமுதாயத்தை விட்டும் பகிஷ்கரிக்கப்பட்டார்கள்,வெட்டப்பட்டார்கள்,கொலை செய்யப்பட்டார்கள்.

இவை அனைத்தும் எதற்காக நடந்தது?

சுய இலாபத்திற்கா? அரசியல் உள்நோக்கத்திற்கா? அல்லது மறுமையின் வெற்றிக்கா?

மறுமையின் வெற்றியை மாத்திரம் இலக்காகக் கொண்டதினாலேதான் இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தலை தூக்கியது.

அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களும் மாத்திரம் காட்டித்தந்த பாதையில் பயணிப்பதற்காகத் தான் அத்துனை கஷ்டங்களும் அனுபவிக்க நேர்ந்தது.

ஆனால் இன்றை நிலை என்ன? தவ்ஹீத் என்றால் என்ன என்பதாவது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? கொள்கை,கொள்கை என்று கூக்குரலிடும் கொள்கை வாதிகளின் நிலை என்ன? சத்தியத்தை தைரியமாக உடைத்துச் சொல்வதற்கு தயாராக இருக்கிறார்களா?

வேற்றுமையில் ஒற்றுமை இதுதான் இன்றைய தவ்ஹீத் வாதிகள் அநேகரின் நிலையாக இருக்கிறது. 

கொள்கையை உடைத்துச் சொன்னால் ஊரில் பிரச்சினை வரும், குடும்பத்தில் பிளவு வரும், சமுதாயத்தின் தூரப்பார்வை நம்மீது படும் இதுதான் நிறையப் பேரை தூய்மையான தவ்ஹீதை விட்டும் தடம் மாறச் செய்துள்ளது.

உமக்கு கட்டளையிடப்பட்டதை தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (15:94)

உண்மை எதுவென்று தெரிந்து விட்டால் அதை உடைத்துச் சொல்லத் தயங்குவதேன்? சத்தியத்தை பயமின்றி விட்டுக் கொடுப்பின்றி உடைத்துப் பேசும் படி இறைவன் தெளிவாக சொல்லிக் காட்டியிருக்கும் போது நாம் ஏன் பின்வாங்க வேண்டும்?

நாம் கொஞ்சம் பேர் தான் இருக்கிறோம். ஆனால் அவர்களோ ஊரில் முக்கால் பகுதியினராக இருக்கிறார்கள். அவர்களுக்கெதிராக நாம் சத்தியத்தை தெளிவாகப் பேசினால் நமக்கெதிராக அவர்கள் அணைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.அதனால் நாம் சில விட்டுக் கொடுப்புகளை செய்து போனால் காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்று இன்றைக்கு பலர் கருத்துச் சொல்கிறார்கள்.

இவர்கள் தான் வானொலி அலைவரிசைகளிலும், தொலைகாட்சி நிகழ்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் வேற்றுமையில் ஒற்றுமை வாதம் பாராட்டுபவர்கள்.

மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!" என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்@ அவன் சிறந்த பொறுப்பாளன்" என்று அவர்கள் கூறினர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும், நற்பேறுடனும் திரும்பினார்கள். அவர்களுக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லை. அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றனர். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். தனது நேசர்களை ஷைத்தான்தான் (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். எனவே நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!. (இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்! அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்ய முடியாது. மறுமையில் அவர்களுக்கு எந்த நற்பேறும் இருக்கக் கூடாதென்று அல்லாஹ் நாடுகிறான். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. நம்பிக்கையை விற்று (இறை) மறுப்பை விலைக்கு வாங்கிக் கொண்டோர், அல்லாஹ் வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

“(நம்மை) மறுப்போரை நாம் விட்டு வைத்திருப்பது அவர்களுக்கு நல்லது" என்று அவர்கள் நினைக்க வேண்டாம். பாவ த்தை அவர்கள் அதிகமாக்கிக் கொள்வதற்கா கவே விட்டு வைத்துள்ளோம். இழிவுபடுத் தும் வேதனை அவர்களுக்கு உண்டு. நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்துக் காட்டாமல் நீங்கள் எப்படி (கல ந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்தி ருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல் லாஹ் விட்டு விட மாட்டான். மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு. (திருக்குர் ஆன் 3: 173-179) 

மேற்கண்ட திருமறை வசனம் என்ன சொல்கிறது? நபியவர்களிடமே சிலர் வந்து மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். அதற்கு இறைவன் சொன்ன பதில் என்ன? மக்களுக்கு பயந்து அல்லது பிரச்சினைக்கு அஞ்சி சத்தியத்தை மறைக்கும் படி சொன்னானா? அல்லது சத்தியத்தில் நிலைத்திருக்கச் சொன்னானா? 

யார் மக்களுக்கு அஞ்சி சத்தியத்தை மறைக்கிறார்களோ, வேற்றுமையில்; ஒற்றுமை காண விளைகிறார்களோ அவர்களுக்கு இறைவன் சொல்லும் பதில் "தனது நேசர்களை ஷைத்தான்தான் (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். எனவே நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்"   அல்லாஹ்வுக்கு யார் பயப்படுகிறார்களோ அவர்கள் சத்தியத்தை ஒருக்காலும் மறைக்கமாட்டார்கள்.

ஆனால் இன்றைக்கு தவ்ஹீத் வாதிகளாக தங்களைத் தாங்களே மார்தட்டிக் கொள்ளக்கூடிய எத்தனையோ சகோதரர்கள் பேச்சில் தவ்ஹீத் வாதிகளாகவும்,நடத்தையில் கொள்கையற்றவர்களாகவுமோ இருக்கிறார்கள்.

ஜும்மா மேடையென்றால் யார் ஜும்மாவில் உரை நிகழ்த்துகிறாரோ அவரிடத்தில் ஆரம்பத்திலேயே நிர்வாகம் பல கட்டுப்பாடுகளையும், கடப்பாடுகளையும் விதிக்கிறது.'இந்த முறையில் பேசுங்கள்.கொள்கையை பேசிவிடாதீர்கள்.இங்கு பல கொள்கையைச் சார்ந்தவர்களும் வருகிறார்கள்.கொள்கையை உடைத்து சொல்லிவிட்டால் அவர்கள் இனிமேல் பள்ளிக்கு வரமாட்டார்கள் அதனால் வரலாறுகள் உபதேசங்களை மாத்திரம் பேசுங்கள்" என்று கொள்கைக்கு ஆப்பு வைக்கிறார்கள் இந்தக் கொள்கைவாதிகள்(?).

இன்று எத்தனை தவ்ஹீத் பள்ளிகளில் பித்அத்துக்கெதிரான பிரச்சாரம் நடக்கிறது? எத்தனை இடங்களில் ஷீர்க்கை எதிர்த்து பிரச்சாரம் செய்கிறார்கள்? தொப்பி இல்லாமல் பயான் செய்யாதீர்கள்.ஜுப்பா போடாமல் மிம்பரில் ஏராதீர்கள்.பொதுவான தலைப்புகளைப் பேசுங்கள் இதுதான் இன்றைய தவ்ஹீத் பிரச்சாரத்தின் லட்சனமாக இருக்கிறது.

இந்த நிலை என்று மாறும்? 

தூய கொள்கையை தூய எண்ணத்துடன்,விட்டுக் கொடுப்பின்றி நாம் செய்ய தயாரானால் இலங்கை நாட்டில் ஏகத்துவப் பிரச்சாரத்தின் வீறுநடையை நாளடைவில் பார்க்களாம். இல்லாவிடில் சீரழிவுதான் மிஞ்சும் என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

ஜின்களிலும்,மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம்.அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன.அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்கு கண்கள் உள்ளன.அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை.அவர்களுக்கு காதுகள் உள்ளன.அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை.அவர்கள் கால்நடைகளைப் போன்றோர்.இல்லை! அதை விடவும் வழிகெட்டவர்கள்.அவர்களே அலட்சியம் செய்தவர்கள். (7:179)



0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons